உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள கொட்வாலி என்ற இடத்தில் பாழும் கிணற்றில் நேற்று கன்றுக்குட்டி ஒன்று விழுந்து விட்டது.
அதன் அலறம் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற விஷ்ணு என்பவர், கிணற்றில் குதித்து கன்றுக்குட்டியை காப்பாற்ற முயன்றுள்ளார்.
அந்த கிணற்றில் விஷவாயு இருந்ததால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனால் அவர் கூச்சல் போட்டுள்ளார்.
இந்த சத்தத்தை கேட்டு அந்த வழியே சென்ற மேலும் நான்கு பேர், அவரை காப்பாற்றும் பொருட்டு அடுத்தடுத்து கிணற்றில் குதித்துள்ளனர்.
விஷவாயு தாக்கி சில நிமிடங்களில் விஷ்ணு உள்ளிட்ட 5 பேரும் உயிர் இழந்தனர்.
ஆனால் கிணற்றுக்குள் விழுந்த கன்றுக்குட்டி பின்னர், உயிருடன் மீட்கப்பட்டது.
அந்த கன்றுக்குட்டி, பலியான 5 பேரில் யாருக்கும் சொந்தமானது இல்லை என்பது உருக வைக்கும் கூடுதல் தகவல்.
உயிர் இழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
-பா.பாரதி.