சென்னை: சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே நடத்த சபாநாயகர் தனபால் தலைமையில் கூடிய அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடர், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி  நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கூட்டப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த மாதம் இறுதிக்குள் சபை கூட்டப்பட வேண்டிய கட்டாயத்தில், வரும்  14-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடுவதாக அறிவிக்கப்பட்டத,.

கொரோனா தொற்று காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டம் நடத்த முடியாத நிலை உள்ளதால்,  திருவல்லிக்கணி பகுதியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 14-ந் தேதி காலை 10 மணிக்கு   கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து,  கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு ஆலோசனை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனையின்போது, எடுக்கப்பட்ட முடிவின்படி,  வரும் செப்.14 முதல் 16 வரை 3 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் நடைபெறும்   அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளும்  அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,   சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னர் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால், சபை 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவித்ததுடன், முதல்நாளான செப்டம்பர் 14-ம் தேதி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என்றார்.

பேரவை காலை 10 மணிக்கு கூடும், சபை தொடரில் கேள்வி நேரம் இடம்பெறும்  என்றும்,  செப்டம்பர் 15ம் தேதி மானிய கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கும்  என்றும் கூறினார்.

சபை கூடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அனைத்த எம்எல்ஏக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடக்கிறது. மேலும் அதிகாரிகள், பணியாளர்கள், போலீசார், பத்திரிகையாளர் என சபை கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும்  கூறினார்.