திருவனந்தபுரம்: கொரோனாவை காரணம் காட்டி கேரள மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை புகார்கள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த இளம்பெண்ணை, ஆம்புலன்சிலேயே பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மற்றொரு கொரோனா மையத்தில், கொரோனா நெகடிவ் சான்றிதழ் தருகிறேன் என கூறி பெண் ஒருவரை இளநிலை சுகாதார ஆய்வாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. இது மாநில மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தில் வீட்டுவேலைக்காக குளத்துப்புழாவுக்கு சென்ற இளம்பெண்ணுக்கு, கொரோனா சிகிச்சை மையத்தில் வைத்து, கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவரிடம் போன்மூலம் தொடர்புகொண்டு குளத்துப்புழா முதன்மை சுகாதார மைய இளநிலை சுகாதார ஆய்வாளர் பிரதீப் என்பவர், அந்த இளம்பெண்ணை தனது வீட்டிற்கு வந்து கொரோனா நெகடிவ் சான்றிதழை பெற்று கொள்ளும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த இளம்பெண் அவரது வீட்டுக்கு சென்றுள்ள நிலையில், ஆய்வாளர் பிரதீப்,அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக அந்த இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த சுகாதார ஆய்வாளர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கேரள மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.