வாஷிங்டன்: உலகிலேயே இந்தியப் பெண்கள்தான் கவர்ச்சியற்றவர்கள் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பேசிய டேப் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1969 முதல் 1974 வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் நிக்சன். வங்கதேச யுத்தத்தில் இந்தியா ஈடுபட்டபோது, அமெரிக்காவுடனான உறவு மோசமடைந்தது. எனவே, அப்போதைய நிலையில், இந்திய அரசின் மீது மிகவும் வெறுப்புடன் நடந்துகொண்டது அமெரிக்கா.
அந்த சமயத்தில் அவர் பேசிய டேப்தான் தற்போது வெளியாகியுள்ளது. அதில், அவர் இந்தியப் பெண்களைப் பற்றி தரக்குறைவாகவும், கண்ணியக் குறைவான முறையிலும் பேசியுள்ளார்.
“உலகிலேயே இந்தியப் பெண்கள்தான் கவர்ச்சி குறைந்தவர்கள். பாலுணர்வு அற்றவர்கள்; அவர்கள் எப்படி பிள்ளைப் பெறுகிறார்கள்?” என்றுள்ளார் நிக்சன். அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் இந்த சமயத்தில் வெளியாகியுள்ள இந்த டேப், அத்தேர்தலில் வாக்களிக்கவுள்ள இந்தியர்களிடையே தாக்கம் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.