துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார்? என்பதை தற்போதைய கேப்டன் தோனி முடிவுசெய்து வைத்திருக்கலாம் அல்லது யோசித்து வைத்திருக்கலாம் என்றுள்ளார் அந்த அணியின் சக வீரர் டுவைன் பிராவோ.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வுபெற்ற நிலையில், அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, அதுகுறித்து தற்போது பேசியுள்ள பிராவோ, “சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எண்ணம் தோனியின் மனதில் சில நேரங்களில் எழுந்திருக்கலாம். அனைவருமே ஏதேனும் ஒரு நேரத்தில் ஓய்வுபெற போகிறவர்களே என்ற நிலையில், தோனியும் ஓய்வுபெற நினைத்தால், அவர் தனது பொறுப்பை ரெய்னா அல்லது வேறொரு இளம் வீரரிடம் அளிக்கலாம்.
தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றாலும்கூட, அவரின் தலைமைப் பண்பில் மாற்றம் எதுவும் இருக்கப்போவதில்லை. இதற்கு முன்னர் எப்படி அசத்தினாரோ, அதையே இப்போதும் தொடர்வார்” என்றார் பிராவோ.