சென்னை: அதிமுக எம்எல்ஏ சக்கரபாணி, திமுக எம்எல்ஏ அப்பாவு ஆகிய 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பப்ட்டு உள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சக்கரபாணி (வயது 61). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில், தனது மனைவி விமலாவுடன் கொரோனா சோதனை மேற்கொண்டார். இதில், எம்எல்ஏ சக்கரபாணி, அவரது மனைவி இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதுபோல, நெல்லை மாவட்ட தி.மு.க. அவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அப்பாவுக்கும் (வயது 69), தொற்று உறுதியாகி உள்ளது. இவர் கடந்த சில நாட்களாக பல்வேறு ஊர்களுக்கும் சென்று நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். இந்த நிலையில் அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.