சென்னை:

டன் தவணை தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும்  என்று  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“வங்கிகளில், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை (EMI) செலுத்தும் கால அவகாசம், ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாக வரும் செய்திகள், கரோனா பேரிடரால் வேலை இழந்து, சம்பளக் குறைப்புக்கு உள்ளாகியுள்ளோருக்கும், தொழில் முடங்கிப் போயிருக்கும் நிறுவனங்களுக்கும் குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதாக இருக்கிறது.

‘கொரோனாவால் இந்தியப் பொருளாதாரம் நொறுங்கிப் போன நிலையில் இருக்கிறது’, ‘தடுக்க முடியாமல் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது, ‘கொரோனாவுடனான போராட்டம் தீவிரமாக இருக்கிறது’ என்றெல்லாம் ரிசர்வ் வங்கியின் ‘பணவியல் கொள்கைகள் வகுக்கும் குழு’ கூட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பேசியிருப்பது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் சக்திகாந்ததாஸ் தான்.

ஆகவே, கொரோனாவின் தாக்கம் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறது, தனிநபர் வருமானம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதெல்லாம் அவருக்குத் தெரிந்திருந்தும், ‘கடன் தவணைகள் திருப்பிச் செலுத்தும் சலுகை நீட்டிக்கப்படாது’ என்ற செய்திகள் வருவதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது, பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல!

‘வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் பழக்கம் வாடிக்கையாளர்களுக்கு மறந்து போகும்’ ‘வங்கிகளின் நிதி நிலைமையையும் பாதிக்கும்’ என்றெல்லாம் இட்டுக் கட்டிய காரணங்களைத் தேடித் தேடிச் சொல்வது, பேரிடர் கால நிர்வாகத்தில் ஏற்றுக் கொள்ள இயலாதவை.

இதே தனிநபர்கள், நிறுவனங்கள் பேரிடருக்கு முன்னர் முறையாகத் தவணைத் தொகைகளைத் திருப்பிச் செலுத்தி வந்ததை ஏனோ ரிசர்வ் வங்கியும், மற்ற வங்கிகளும் மறந்து விட்டு, ‘கால அவகாசம் நீட்டிக்கக் கூடாது’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியிருப்பது வாடிக்கையாளர் விரோத மனப்பான்மையின் உச்சக்கட்டமாகத் தெரிகிறது.

‘வாடிக்கையாளருக்கு முதல் சேவை’ என்ற இலக்கணத்திற்கும் விரோதமானது; வேலை இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்போரின் வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சும் செயல்!

வாடிக்கையாளர்கள், குறித்த நேரத்தில் தவணைத் தொகை செலுத்திய போது மகிழ்ந்த வங்கிகள், இப்போது பேரிடர் காலத்தில் அவர்களை வாட்டி வதைக்க வேண்டும் என்று நினைப்பது மனிதாபிமானமும் அல்ல!

ஆகவே, ஹெச்.டி.எப்.சி வங்கி தலைவர் தீபக் பரேக், கோட்டக் மகேந்திரா வங்கி இயக்குநர் உதய் கோட்டக் போன்றோர் ‘கால அவகாசம் கொடுக்கக் கூடாது’ என்று ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்த்திட வேண்டும் என்றும் நேர்மையாகப் பணம் செலுத்தி இதுவரை உங்களுடன் இருக்கும் வாடிக்கையாளர்களின் நலனை முதன்மையாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா பேரிடரின் கொடிய பிடியில் சிக்கியுள்ள மக்களையும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும் மீட்டு பொருளாதார ரீதியாக தொழில் ரீதியாக முன்னேற்றி வளர்ச்சி நீரோட்டத்தில் தக்க விதத்தில் இணைத்திட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய பாஜக அரசுக்கு இருக்கிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும் ‘கடவுளின் செயல்’ என்ற கோட்பாடு மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகைக்கு நிச்சயம் பொருந்தாது; ஆனால், கடன் வாங்கி, வருமான இழப்புக்கு உள்ளான மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் மிகச் சரியாகப் பொருந்தக்கூடும் என்பதை ரிசர்வ் வங்கி இந்த நேரத்தில் உணர வேண்டும்.

ஆகவே, கொரோனா கால ஊரடங்கு என்ற ஒரு கண்ணோட்டத்துடன் மட்டும் இதைப் பார்க்காமல்; ஊரடங்கையும் தாண்டி ஒவ்வொருவரின் கைகளில் இருக்க வேண்டிய ‘ரொக்கப் பணம்’ அல்லது ‘வருமானம்’ என்ற நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்கிறது என்பதை உள்மனதில் வாங்கிக் கொண்டு, கடன் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த ஏற்கெனவே ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திட வேண்டும் என்றும், அப்படி நீட்டிக்கப்பட்ட காலங்களுக்கு உரிய வட்டித் தொகை, அபராத வட்டி போன்றவற்றை வசூலிக்காமல், ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டிட முன்வர வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை கேட்டுக் கொள்கிறேன்.

‘பிசினஸ் ஸ்டாண்டர்டு’ நடத்திய காணொலிக் காட்சியில் ஆகஸ்ட் 27-ம் தேதி உரையாற்றிய ரிசர்வ் வங்கி ஆளுநர், லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘போரும் அமைதியும்’ (War and peace)’ என்ற நூலினை மேற்கோள் காட்டி, ‘வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானமாகச் செயல்படுபவர்களால்தான் கரோனா போராட்டத்தில் வெற்றி பெற முடியும்’ என்று பொருத்தமாகவே பேசியிருக்கிறார்.

ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் அப்படிப்பட்ட வெற்றியைப் பெற்றிடவே கொரோனா காலத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நேசக்கரம் நீட்டிட வேண்டும் என்றும், சமீபத்தில் தனது 584-வது நிர்வாகக்குழுக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியின் உபரித் தொகையிலிருந்து 2019-20-ம் ஆண்டுக்கான 57 ஆயிரத்து 128 கோடி ரூபாயைக் கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கும் ரிசர்வ் வங்கிக்கு, இதுபோன்ற ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்காக உதவி செய்ய முன்வருவது மிகப்பெரிய சவால் அல்ல என்பதையும் ரிசர்வ் வங்கி ஆளுநர் மனதில் கொள்ள வேண்டும் என்றும்; வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.