புதுடெல்லி: இந்திய ஜிடிபி வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதைக் காட்டுவதற்காக, பழைய ஐஎம்எஃப் தரவைப் பயன்படுத்திக் கொண்டுள்ள பாரதீய ஜனதா என்ற உண்மை தற்போது வெளியாகியுள்ளது.

போட்டோஷாப் செய்வது, தவறான புள்ளி விபரங்களை வெளியிடுவது உள்ளிட்ட செயல்களுக்கு புகழ்பெற்ற கட்சி பாரதீய ஜனதா. அந்தக் கட்சியின் பாரம்பரிய திருவிளையாடல்களில் தற்போது இன்னொன்றும் வெளியாகி சந்தி சிரித்துள்ளது.

இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட 9 நாடுகளின் ஜிடிபி வளர்ச்சி குறித்த ஒரு விளக்கப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டிருந்தது பாரதீய ஜனதா. அந்த விளக்கப்படத்தில், சீனாவின் ஜிடிபி வளர்ச்சி 1.2% என்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சி 2020ம் ஆண்டிற்கு 1.9% என்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவு 2500 முறை மறுட்வீட் செய்யப்பட்டது.

மேலும், இந்தியா, கொரோனாவையும் மீறி, ஒரு ஒளிரும் பொருளாதாரமாக திகழ்வதாயும், வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற தனது தகுதியை தக்க வைத்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விளக்கப்படத்திற்கு, மத்திய அரசு பயன்படுத்தியிருக்கும் தரவு பழையதாகும். கடந்த ஏப்ரல் மாதம், இந்தியாவின் வளர்ச்சியை மதிப்பிட்டு, ஐஎம்எஃப் வெளியிட்ட தரவையே, ஆகஸ்ட் மாதத்திற்கும் பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.