டெல்லி: மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தினை இ-பாஸ் காரணம் காடி தடை செய்யக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் 3முறை தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து பல மாநிலங்களில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பொதுமக்கள், வாகனங்கள் செல்ல இ-பாஸ்முறை நடைமுறைப் படுத்தப் பட்டது. இது பல மாநிலங்களில் விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில் இன்னும் நடைமுறையில் உள்ளது.
இதன் காரணமாக, வெளிமாநிலங்களைச்சேர்ந்த சரக்கு லாரிகள் உள்பட போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்து இ-பாஸ் தேவையில்லை, மாநில அரசுகள் தடுக்கக்கூடாது என மத்தியஅரசு அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனுப்பிய சுற்றறிக்கையில், மாநிலங்களுக்கு இடையில் மற்றும் மாநிலங்களுக்குள் தனி நபர் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றை மாநில அரசுகள் தடையோ அல்லது கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதிக்கக்கூடாது.
உள்ளூர் அளவிலான கட்டுப்பாடுகள் மாநிலங்களுக்கு இடையே சரக்கு மற்றும் சேவை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், இதனால் விநியோக சங்கிலிகள் பாதிக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு தடை ஏற்படுத்துவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Unlock3 வழிகாட்டுதல்படி மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்திற்கு உள்ளே தனிநபர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளது.