இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில், தனது மகன் 10ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுவதற்காக, ஊரடங்கு காரணமாக, அந்த மாணவனின் தந்தை 85 கி.மீ. தூரம் சைக்கிள் மிதித்தே, மகனை தேர்வு மையத்திற்கு கொண்டுவந்து சேர்த்துள்ளார்.

அந்த தந்தை கூறியுள்ளதாவது, “மிகவும் சிரமப்பட்டே வந்தடைந்தோம். ஆனால், பேருந்துகள் இல்லாத காரணத்தால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. என் மகன் படிக்க வேண்டும். நான் பல இடங்களில் கூலி வேலை செய்து, அதில் பணம் சம்பாதித்து என் மகன் படிவத்தைப் பூர்த்திசெய்ய உதவினேன்.

நாங்கள் ஆகஸ்ட் 17ம் தேதி எங்கள் பயணத்தை துவக்கினோம். நாங்கள் எங்களுக்காக சிறிது உணவை எடுத்துக் கொண்டோம். அதை வழியில் உண்டோம்” என்றார்.

“பேருந்து இல்லாத காரணத்தால் நாங்கள் சைக்கிளில் வந்தோம். நான் ஒரு அதிகாரி ஆக வேண்டுமென்று விரும்புகிறேன்” என்றான் அந்த மாணவன்.

“அந்த தந்தையும் மகனும் அரசு அதிகாரி யாரிடமாவது தெரிவித்திருந்தால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். ஏனெனில், தற்போது பல தனியார் வாகனங்கள் இயங்குகின்றன. அதேசமயம், அவர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. அந்த மாணவனின் தகுதிக்கேற்ப அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்றார் சம்பந்தப்பட்ட தார் மாவட்ட ஆட்சியர்.