டெல்லி: கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த 5 மாதங் களுக்கும் மேலாக மூடப்பட்டு உள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணாக்கர்களுக்கு கல்வி போதிக்கத் தொடங்கி உள்ளது.
ஆனால், 94% குழந்தைகளுக்கு இணையதள வசதி மற்றும் மொபைல் போன் வசதி இல்லை என குழந்தைகளுக்கு ஆய்வு அமைப்பான ‘கிரை’ குழந்தைகள் அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.
குழந்தைகள் உரிமை அமைப்பான கிரை (CRY – Child Rights and You) நாடு முழுவதும், கடந்த மே, ஜூன் மாதங்களில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. கொரோனா பொதுமுடக்கம் காலத்தில், மாணாக்கர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க வசதியாக ஸ்மார்ட்போன் அல்லது இன்டர்நெட் வசதி பெற்றுள்ளனரா என்பது குறித்து, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் ஆய்வுகளை நடத்தியது.
இந்த மாநிலங்களைச் சேர்ந்த 5,987 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆன்லைன் கல்வி தொடர்பாக, சுமார் 94 சதவீதம் பேரிடம் இணையதள வசதி இல்லை என்றும், பலரிடம், அதற்கான ஸ்மார்ட் போன்கள் வசதி இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 1740 பேரில் வெறும் மூன்று சதவீதம் பேருக்கு மட்டுமே ஸ்மார்போன்கள் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், இதில் ஸ்மார்ட் போன் என்பது ஆடம்பர செலவாகவே கருதப்படுகிறது.
95 சதவீத குடும்பங்களின் ஆண்டு வருமானம் 1லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது.
நான்கு மாநிலங்களில் சுமார் 94 சதவீதம் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்விக்கான ஸ்மார்ட் போன்கள் மற்றும் இணையவசதி இல்லை.
6 சதவீத குழந்தைகள் மட்டுமே, தங்களுக்கென்று ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறார்கள்.
29 சதவீதம் பேர் தங்கள் குடும்பத்தினரின் போனைப் பயன்படுத்துகிறார்கள்.
இதில் 55 சதவீதம் பேருக்கு வாரத்தில் மூன்று நாட்கள் அல்லது அதற்கும் குறைவான நாட்கள் மட்டுமே குடும்பத்தினரின் ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் வாய்ப்பு உள்ளது. இதிலும், 77 சதவீதம் பேருக்கு 2 மணிநேரம் அளவுக்கே ஸ்மார்ட்போன் உபயோகிக்க கிடைக்கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளது.