புதுடெல்லி: ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், சமூகவலைதள ஜாம்பவானான முகநூல் நிறுவனத்திற்கும் இடையே ஒரு ‘நெறிமுறையற்ற மறைமுக உறவு’ இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி.

கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, முகநூல் நிறுவனத்தின் உயரதிகாரி அன்கி தாஸுக்கு, மூத்த பாரதீய ஜனதா தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த தொடர்பு வெளிப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் பவான் கேரா, கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம், அப்போதைய முகநூல் நிறுவன பொதுக்கொள்கை தொடர்பான உலகளாவிய துணைத் தலைவர் மார்னே லெவின் அனுப்பிய, இடைத்தரகர் விதிமுறைகள் குறித்த ஒரு குறிப்பானை குறித்து, அப்போதைய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கபில் சிபல் பங்கேற்ற ஒரு உள்ளரங்க சந்திப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.

அந்த சந்திப்பில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ஐக்கிய முன்னணி அரசு பதவி வகித்தபோது, பாரதீய ஜனதா – முகநூல் நிறுவனம் ஆகியவற்றுக்கிடையே இருந்த உறவு உள்ளார்ந்த மின்னஞ்சல்கள் மூலம் வெளிப்பட்டுள்ளதாகவும் பவான் கேரா தெரிவித்துள்ளார்.