வெலிங்டன்: கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக, நியூசிலாந்தில் நடைபெறவிருந்த பொதுத்தேர்தலை 4 வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில், உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக நியூசிலாந்து அரசு திறம்பட செயல்பட்டு வருகிறது. இருப்பினும், நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 102 நாட்களுக்குப் பின், மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, செப்டம்பர் 19ம் தேதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தல், அக்டோபர் மாதம் 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.
அந்நாட்டில், கடந்த 24 மணிநேரத்தில், 9 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு மொத்த பாதிப்பு 1,631 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 22 பேர் வரை மட்டுமே அங்கு கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.