கோஹிமா: நாகலாந்து மாநிலத்திற்கென்று தனி கொடி மற்றும் தனி அரசியலமைப்புச் சட்டம் இல்லாமல், இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் கிடைக்காது என்றுள்ளார் நாகலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் – ஐஎம் பிரிவின் தலைவர் டி.முய்வா.
நாகா சுதந்திர தினத்தின் வருடாந்திர உரையின்போது அவர் பேசியதாவது, “இந்திய யூனியனையோ அல்லது அதன் அரசியலமைப்புச் சட்டத்தையோ ஒருபோதும் எந்த சூழலிலும் நாகா மக்கள் ஏற்றுக்கொண்டதில்லை. வரலாறு அந்த உண்மையைப் பேசும்.
இன்று மட்டுமல்ல, இனிவரும் நாட்களிலும் நாங்கள் இந்தியாவை ஏற்கப்போவதில்லை. தனிக்கொடியும், தனி அரசியலமைப்பு சாசனமும் நாகா தேசத்தின் அடையாளங்கள். அதை நாங்கள் இந்திய அரசிடமிருந்து கேட்கவில்லை.
நீங்கள் அதை ஏற்றுக்கொண்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி, நாங்கள் அவற்றை தனியாக கொண்டிருக்கிறோம். நாகாக்கள் தங்களின் கொடி மற்றும் அரசியலை பாதுகாப்பது அவசியம்” என்றார் அவர்.