பெங்களூரு
கிழக்கு பெங்களூரு புலிகேசி நகர்ப் பகுதியில் உள்ள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சீனிவாச மூர்த்தியின் வீட்டு முன்பு கடும் வன்முறை ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
பெங்களூரு கிழக்குப் பகுதியில் உள்ள புலிகேசி நகரில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சீனிவச மூர்த்தியின் இல்லம் அமைந்துள்ளது. சீனிவாச மூர்த்தியின் உறவினரான நவீன என்பவர் முகநூலில் ஒரு பதிவு ஒன்றைப் பதிந்தார். அந்த பதிவில் இஸ்லாம் மதம் குறித்தும் முகமது நபி குறித்து அவதூறு பரப்பும் புகைப்படம் இருந்ததாகப் புகார் அளிக்கப்பட்டது.
இதையொட்டி அந்தப் பகுதியில் கடும் கலவரம் எழுந்துள்ளது. நவீன் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கலவரக்காரர்கள் கூறி உள்ளனர். நேற்று இரவு சீனிவாச மூர்த்தி வீட்டு முன்பு கலவரக்காரர்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கலவரக்காரர்கள் தீ வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.
தீயணைப்பு வண்டிகளுக்கு வழி விடாத கலவரக்காரர்களை விரட்ட காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதையொட்டி பெங்களூரு டிஜே ஹள்ளி காவல் நிலையம் கல்வீசித் தாக்கப்பட்டது. தற்போது சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் கைது செய்யப்பட்டுள்ளார். தனது முகநூல் கணக்கு யாரோ விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த கலவர செய்தியை நேரடியாக அறிவிக்க முயன்ற கன்னட செய்தி தொலைக்காட்சியான சுவர்னா நியூஸ் தொலைக்காட்சி செய்தியாளர்கள் ரவி மற்றும் பிரதீப் ஆகியோர் கலவரத்தில் தாக்கப்பட்டு காயம் அடைந்துள்ளனர். அவர்களது காமிராக்கள் உடைக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை அளித்துள்ள வீடியோ செய்தியில், “விவகாரம் ஏதுவாக இருந்தாலும் விசாரணை நடத்த உள்ளோம். கலவரம் என்பது இதற்கு தீர்வு ஆகாது. காவல்துறை இது குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்த நான் உத்தரவிட்டுள்ளேன். கலவரத்தைக் கட்டுப்படுத்த மேலும் காவல் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து சீனிவாச மூர்த்தி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் “நான் எனது இஸ்லாமியச் சகோதரர்களிடம் ஒரு சில விஷமிகளின் செயலுக்காக மன்னிப்பு கோருகிறேன்.நாம் சண்டை இடவேண்டாம்.சண்டையிட்டாலும் நாம் சகோதரர்கள், தவ்ரு செய்வோருக்கு நாம் சட்டத்தின் மூலம் பாடம் புகட்டுவோம். நாங்கள் என்றும் உங்களுடன் இருக்கிறோம் எனவே இஸ்லாமியச் சகோதரர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.