டெல்லி: நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப் பட்டு இருப்பதாக இந்தியன் ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியானது. தற்போது, இதை ரயில்வே அமைச்சகம் மறுத்து உள்ளது. அப்படியொரு அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என்று தெரிவித்து உள்ளது.
கொரோனா தடுப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும், மேலும் செப்டம்பர் மாதம் 30ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே அறிவிக்கை ஒன்று நேற்று வெளியானது. இதை, ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன.
இந்த நிலையில், ரயில் சேவை ரத்து என்பது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், சிறப்பு மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி வரையிலும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.