பெங்களூரு: இந்தி எதிர்ப்பில், திமுக எம்பி கனிமொழிக்கு கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி குமாரசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு திமுக எம்பி கனிமொழி வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு சோதனையில் இருந்த சிஐஎஸ்எப் பெண் அதிகாரி ஒருவர் நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்டார். அவரது இந்த செயல் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து தமது அனுபவத்தை அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறி இருந்தார். அதன் பிறகு சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியிடன் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், தமது டுவிட்டர் பதிவில் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்தார்.
தமக்கு மட்டுமல்லாது, பலருக்கும் இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கூறி இருந்தார். திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவும் கனிமொழிக்கு ஆதரவளித்து உள்ளார். இந் நிலையில், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் ஹெச். டி. குமாரசாமி, கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவரும் கடந்த காலங்களில் இதேபோன்ற சூழ்நிலைகளை சந்தித்ததாகவும், கன்னடத்தில் நாடாளுமன்றத்தில் செய்யப்பட்ட உரைகளை ஆளும் வர்க்கம் புறக்கணித்து வருவதாகவும் கூறி உள்ளார். வேலைவாய்ப்புக்கான பல மத்திய அரசு தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்படுகின்றன.
பிராந்திய மொழி மாணவர்கள் இந்த அணுகுமுறையின் காரணமாக வேலை வாய்ப்புகளை இழக்கின்றனர். நாடு முழுவதும் இந்தியை தள்ளுவது மத்திய அரசின் மறைமுக செயலாக இருக்கிறது என்று கூறி உள்ளார்.