கொச்சி:
விமானி மற்றும் துணை விமானி உட்பட குறைந்தது 17 பேரை கொன்ற ஏர் இந்தியா விமான விபத்து குறித்து உடனடியாக விசாரணை செய்யும்படி காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதைப் பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் தெரிவித்துள்ளதாவது: கரிபூரில் நடந்த விபத்து மிகவும் அதிர்ச்சியூட்டும் சம்பவமாக அமைந்துள்ளது. அவசரகால மீட்பு மற்றும் உதவிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும். இந்த அதிர்ச்சிகரமான விபத்தின் பின்னணியில் உள்ள சரியான காரணத்தை கண்டறிய உடனடி விசாரணைக்கு உத்தரவிடுமாறு நான் ஏற்கனவே விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு அவசர மருத்துவ பராமரிப்பு மற்றும் உதவி உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதைப் பற்றி காங்கிரஸ் தகவல் தொடர்பு துறை பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: காணாமல் போன பயணிகள் விரைவில் கண்டுபிடிக்க படவேண்டும், காயமடைந்தவர்கள் விரைவாகக் குணமடைய விரும்புகிறேன், மேலும் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த ஆன்மாக்கள் சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத்தின் கீழ் துபாயிலிருந்து திரும்பிய ஏர்இந்தியா விமானம் நேற்று மாலை பெரும் விபத்துக்குள்ளானது. கேரளாவில் நடந்த மோசமான விமான விபத்து இதுவாகும். மொத்தம் 190 பேரில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் விமானி டி வி. சாத்தே மற்றும் துணை விமானி அகிலேஷ் குமாரும் உயிரிழந்துள்ளனர்.
கோழிக்கோடு விமான நிலையத்தில் பலத்த மழையின் காரணமாக விமானம் கீழே இறங்க முயன்ற இரண்டாவது முயற்சியில் சறுக்கி உள்ளதால் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது.
இரவு 7.41 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தை தொடர்ந்து கோழிக்கோடு விமான நிலையம் மூடப்பட்டது. மேலும் கோழிக்கோடில் தரையிறங்க திட்டமிடப்பட்ட விமானங்கள் அனைத்தும், கோழிக்கோடிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கண்ணூர் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.