டெல்லி: கால்வன் மோதல் மீண்டும் நிகழாமல் தடுக்க, ரோந்து நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்துவது குறித்து, இந்தியா-சீனா அரசு தரப்பில் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்திய, சீன எல்லையில் ஒன்றான லடாக் பகுதிகளில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி, இரு நாட்டு ராணுவவீரர்களுக்கும் சண்டை எழுந்தது. சண்டையில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை.
இருப்பினும் இந்த சண்டையி, படுகாயம் அடைந்த இந்திய வீரர்கள் பலர் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் முக்கிய ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இரு நாட்டு எல்லைகளில் தற்போது வரையில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
இந் நிலையில் லடாக் எல்லையில் படைகளை விலக்கி கொள்வது குறித்து ராணுவ அதிகாரிகள் நிலையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடுதல் படைகளை திரும்ப பெறுவதை தொடர்ந்து, இரு நாட்டு ராணுவ வீரர்கள் ரோந்து பணியின்போது இனி மோதல் ஏற்படாமல் தடுப்பதும் முக்கியம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
எல்லையில் இருநாடுகளும் உள் கட்டுமானங்களை வலுப்படுத்தி, ரோந்து பணிகளையும் அதிகரித்துள்ளன. ஆகையால் உரசல் ஏற்படுவது அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் எந்த பகுதிகளில் எத்தனை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் உள்ளிட்ட விவரங்களை இரு தரப்பினரும் பகிர்ந்து ரோந்து செல்லும் நெறிமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் மோதலை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.