ராமர் கோயில் கட்டுவதற்கு உத்தவ் தாக்கரே  ஒரு கோடி ரூபாய் நன்கொடை..

சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்-அமைச்சருமான உத்தவ் தக்கரே கடந்த மார்ச் மாதம் அயோத்திக்குச் சென்றிருந்தார்.

அப்போது அவர்’’ ராமர் கோயில் கட்டுவதற்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளிக்கிறேன். அரசாங்க பணத்தில் இருந்து இந்த தொகையை வழங்க வில்லை. எனது அறக்கட்டளை பணத்தில் இருந்து இந்த பணம் அளிக்கப்படும்’’ என அறிவித்தார், உத்தவ்.

இந்த நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் கோபால்தாஸ்’’ வாக்குறுதி அளித்தபடி உத்தவ் தாக்கரே ஒரு கோடி ரூபாய் தர வில்லை’’ எனக் கூறி இருந்தார்.

ஆனால் ‘’ உத்தவ் தாக்கரே உறுதி அளித்தபடி ஒரு கோடி ரூபாயைக் கோயில்,அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் கடந்த 27 ஆம் தேதியே, உத்தவ் தாக்கரேயின்  60 – வது பிறந்த நாளின் போது செலுத்தி விட்டோம்’’ என சிவசேனா கட்சியின் ராஜ்யசபா எம்.பி.அனில் தேசாய் கூறியுள்ளார்.

ராமர் கோயில் பூமி பூஜையை , கொரோனா அச்சம் உள்ளதால், காணொலி காட்சி மூலம் நடத்தலாம் என உத்தவ் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

-பா.பாரதி.