சென்னை: மாவட்டம், விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் நடைமுறை தொடரும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
ஊரடங்கு விதிகளை மத்திய அரசு தளர்த்திவிட்டு மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ பாஸ் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. ஆனால் திருமணம், மருத்துவம், நெருங்கிய உறவினரின் மரணம், வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்கள் இ-பாஸ்க்கு விண்ணப்பித்தால் அதை பரிசீலித்து மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வர தமிழக அரசு அனுமதி அளிக்கிறது.
இதற்காக தமிழ்நாடு கோவிட்-19 இ-பாஸ் வெப்சைட் உருவாக்கப் பட்டுள்ளது. ஆனால் நெருங்கிய உறவினர்கள் மரணம், அவசர மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுக்காக அருகில் உள்ள மாவட்டங்களுக்குச் செல்ல சான்றுகள் வைத்து விண்ணப்பித்தாலும் பெரும் பாலான விண்ணப்பங்கள் நிராகரிக் கப்படுகின்றன.
இ பாஸ் விண்ணப்பங்களை, விண்ணப்பித்தவர் செல்லும் மாவட்ட நிர்வாகம்தான் பரிசீலிக்க வேண்டும். ஆனால், புதியவர்கள் வந்தால் அவர்கள் மூலம் கொரோனா பரவக்கூடும் என்று கருதி இ-பாஸ் கட்டுப்பாடுகளை கடுமையாக்குகின்றனர். தினமும் ஒரு சிலருக்கு மட்டும் பெயளரவுக்கு இ பாஸ் வழங்குவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
இ பாஸ் நடைமுறை யால் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் வாழ்வாதார இடங்களுக்கும், உறவினர் திருமணங்களுக்கும், துக்க நிகழ்வுகளுக்கும் செல்ல முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். அதனால், மண்ட லங்களுக்கு இடையேயாவது இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.