சென்னை: புழல் அருகே வாடகை வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நிர்பந்தித்ததால் தீக்குளித்தவர் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் குழல் அடுத்த விநாயகபுரம் பால விநாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் ராஜேந்திரன். அவரது வீட்டில் சீனிவாசன் என்பவர் கடந்த 6 மாத காலமாக வாடகைக்கு வசித்து வந்துள்ளார். பெயிண்டர் வேலை செய்யும் சீனிவாசன் ஊரடங்கு காரணமாக தனது வாழ்வாதாரத்தை இழந்து மூன்று மாதமாக வீட்டு வாடகை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து வாடகை கொடுக்காமல் இருந்த சீனிவாசனை வீட்டை காலி செய்யுமாறு ராஜேந்திரன் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால் சீனிவாசன் மறுக்க, ராஜேந்திரன் புழல் காவல் நிலையத்தில் 29ம் தேதி புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் புழல் காவல் ஆய்வாளர் பென் சாம் சீனிவாசனிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. அப்போது பென் சாம் சீனிவாசனின் மனைவி மற்றும் மகள் முன்னால் அவரை தாக்கியுள்ளார். இதையடுத்து அவமானத்தை தாங்கமுடியாத சீனிவாசன் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சீனிவாசனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி தீக்குளித்த தொழிலாளி சீனிவாசன் உயிரிழந்தார். இதையடுத்து, புழல் காவல்நிலைய ஆய்வாளர் பென் சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆய்வாளர் தாக்கியதாக தீக்குளித்த சீனிவாசன் வாக்குமூலம் அளித்த நிலையில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நடவடிக்கை எடுத்துள்ளார்.