ராஞ்சி
ஜார்க்கண்ட் மாநில கட்டா மக்களவை தொகுதி உறுப்பினர் நிஷிகாந்த் துபேயின் போலி எம் பி ஏ பட்டப்படிப்பு கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலம் கட்டா மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ள நிஷிகாந்த் துபே நடந்து முடிந்த தேர்தலில் தாம் எம் பி ஏ பட்டம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தாம் கடந்த 1993 ஆம் வருடம் டில்லி பல்கலைக்கழகத்தில் இருந்து பகுதி நேரக் கல்வி மூலம் எம் பி எ பட்டம் பெற்றுள்ளதாக அவர் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வந்தன. இது குறித்து பிஜேந்திர குமார் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை அளித்துள்ளார். அதற்கு டில்லி பல்கலைக்கழகம் அளித்த பதிலில் டில்லி பல்கலைக்கழகம் அந்த வருடம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து நிஷிகாந்த் என்னும் பெயரில் யாரும் பகுதி நேர எம் பி எ பட்டம் பெறவில்லை என தெரிய வந்துள்ளது.
அத்துடன் டில்லி பல்கலைக்கழகம் பட்டப்படிப்பு விவரத்தை போலியாக அளித்ததால் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கடிதம் எழுதி உள்ளது. மேலும் எதிர்க்கட்சிகளும் இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்துள்ளன. தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த விவகாரம் கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.