சென்னை

சென்னை நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விரைவில் 3 இலக்கமாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  அதில் சென்னையில் அதிக அளவில் பாதிப்புக்கள் உள்ளன.  இன்று தமிழகத்தில் 5881 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு 4,45,859 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்  இதுவரை 1,89,956  பேர் குணமாகி 3935 பேர் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது 57968 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது சென்னையில் 99,974 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு அதில் 2110 பேர் உயிர் இழந்துள்ளனர்  இதுவரை 84,916 பேர் குணம் அடைந்து தற்போது 12,768 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  சென்னையில் இந்த மாதம் தொடக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2400 வரை இருந்தது.  அதன் பிறகு குணமடைந்தோர் எண்ணிக்கை 60% லிருந்து 85% ஆக உயர்ந்தது. பாதிப்படைந்தோர் விகிதமும் 12.7% குறைந்தது.

சென்னையில்  தற்போது பாதிப்படைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து 1400க்கும் குறைவாகவே உள்ளன.  இன்றைய பாதிப்பு எண்ணிக்கை 1027 ஆக உள்ளது.  இது மேலும் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  இந்த எண்ணிக்கை விரைவில் 4 இலக்கத்தில் இருந்து 3 இலக்கமாகக் குறையும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, மணலி, தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் மண்டலங்களில்  பாதிப்பு 10% குறைந்துள்ளது.  இதைப் போல் ஆறு மண்டலங்களில் குணமடைவோர் 85% அதிகரித்துள்ளனர்.  முன்பு சோதனை மற்றும் பாதிப்பு விகிதம் 9% ஆக இருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 5% ஆக குறைய வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.