திரிஷாவுடன் நடித்த பாடகி எஸ்.ஜானகி..
==================================
டிக்காத மேதைகள் நம் நாட்டில் பலர் உண்டு அவர்கள் நாட்டை ஆண்டிருக் கிறார்கள், விஞ்ஞானத்தை ஆண்டிருக்கிறார்கள். ஞானத்துக்கும் படிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று பல அறிஞர்கள் சொல்லியிருக் கிறார்கள். கர்மவீரர் காமராஜரை படிக்காத மேதை என்பார்கள். அவர் தமிழ் நாட்டை ஆண்டதுடன் இந்தியாவை யார் ஆள வேண்டும் என்பதை நிகழ்த்திக்காட்டியிருக் கிறார். நடிகர் கமலும். ’நான் அதிகம் படிக்க வில்லை’ என்பார். ஆனால் பல மொழிகள் பேசுவார். பல்கலை கழகம்போல் நடிப்பு, பாட்டு, இசை, நடனம், இயக்கம், கவிதை, அரசியல் என்று ஒரு பல்கலைக் கழகமாக இருப்பதுடன் இன்று உலக நாயகனாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். அப்படித்தான் கான சரஸ்வதி ஜானகியும் அவரும் ஒரு படிக்காத மேதைதான். இறைவன் அவருக்கு இசை வடிவில் எல்லாவற்றையும் அமைத்துக் கொடுத்தார். அவர் இசை உலகை ஆண்டிருக்கிறார்.

’படிப்புத்தான் பிற்காலத்தில் சோறுபோடும்.. வா’ என்று ஜானகியை அவரது தந்தை வற்புறுத்தி பள்ளிக்கு அனுப்பினார். ஆனால் ஜானகிக்கு சிறுவயதில் படிப்பு சரியாக வரவில்லை. தந்தை எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ஒரு பிரயோஜனம் இல்லை. ’சரி நீ இதை கற்றுக்கொள் வா’ என்று சொல்லி அவரை கையைபிடித்து அழைத்துச் சென்று நாதஸ்வர மேதை பைடிசாமி என்பவரிடம் முறைப்படி இசை கற்கச் சேர்த்துவிட்டார், அங்குதான் ஜானகியின் இசை ஞானம் வெளிப்பட்டது. குரு பாடல் சொல்லித் தர அதை கற்பூரம் போல் பற்றிக் கொண்டு இருமடங்கு இசை மற்றும் குரல் வளத்துடன் பாடினார் ஜானகி.
ஜானகியின் இசை ஞானத்தை கண்டு வியந்த குரு, ’இதற்கு மேல் உனக்கு பாட்டு கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நீ அதில் தேர்ச்சி பெற்று இருக்கிறாய், போய் வா’ என்று ஆசி கூறி அனுப்பினார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை கண்டறிந்தவர் ஜானகியின் இசை குருநாதர். இசையே ஜானகியின் உருவெடுத்துக் கொண்டதுபோல் அவர் இன்றைக்கு பல்வேறு சாதனைகளை செய்துக்காட்டி இருக்கிறார்.
மூன்று தலைமுறையை கடந்துவிட்ட எஸ்.ஜானகி இன்றைய தலைமுறையுடன் இணைந்து நடித்திருக்கிறார் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.
சி.விஜயகுமார் இயக்கிய ’96’ படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா இருவரும் இரவில் பேசிக் கொண்டே சாலையில் நடந்து செல்வார்கள். அப்போது பாடகி எஸ்.ஜானகியின் வீடு வரும். திரிஷாவும் விஜய் சேதுபதியும் ஜானகியை சந்திப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. படத்தின் நீளம் கருதி அக்காட்சி படத்தில் இடம் பெறவில்லை. பின்னர் அந்த காட்சி யூ டியூபில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதோ அந்த காட்சி…

’இதுதான் எஸ்.ஜானகி வீடு’ என்று விஜய் சேதுபதி காட்டுவார்.
’இந்த வீடா ?!’ என்று ஆச்சரியம் கலந்த கேள்வியுடன் வீட்டை பார்க்கும் திரிஷா, ’என்னை அவர் வீட்டு அருகில் வைத்து ஒரு போட்டோ எடு’ என்று போஸ் தர தயாராவார்.
(அப்போது ஒரு கார் அவர்கள் அருகில் வந்து நிற்கும்)
காரை ஒட்டி வருபவர், ’நீங்க ரெண்டு பேரும் யாரு, வீட்டை ஏன் போட்டோ எடுக்கிறீர்கள்?’ என மிரட்டும் தொணியில் கேட்பார்.
திடீரென்று காரிலிருந்து எட்டிப் பார்க்கும் எஸ்.ஜானகி,
‘நீங்க யாருப்பா? ஏன், இங்க நிக்கிறீங்க?’ என்பார். அவரை பார்க்கும் விஜய் சேதுபதி திரிஷா இருவரும் ஒரு நொடி ஆச்சர்யத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்.
விஜய் சேதுபதி திரிஷாவை காட்டி ‘அவங்க உங்க ரசிகை, உங்கள பார்க்க வந்தோம்’ என்பார்.
உடனே ஜானகி, ’அப்படின்னா ஏன் வெளியே நிக்கறீங்க, வீட்டுக்குள்ளே வாங்க’ என்று வீட்டுக்குள் அழைத்து சென்று உட்கார வைத்து நலம் விசாரிப்பார்.
’இவங்க நல்லா பாடுவாங்க, அதுவும் உங்க பாட்டுதான் பாடுவாங்க’ என திரிஷவை பற்றி ஜானகியிடம் விஜய் சேதுபதி சொல்ல,
‘அப்படியா, என் பாட்டு மட்டுமில்ல யார் பாடின பாட்டு நல்லா இருந்தாலும் அவங்க பாடலையும் பாடணும்’ என்று திரிஷாவுக்கு அட்வைஸ் செய்துவிட்டு ’எங்க ஒரு பாட்டு பாடு கேட்போம்’ என்பார் ஜானகி.

முரளி, ரேவதி நடித்த ’பகல்நிலவு’ படத்தில் எஸ்.ஜானகி இளையராஜாவுடன் இணைந்து பாடிய ’பூமாலையே தோள் சேரவா’ என்ற பாடலை திரிஷா பாடுவார். அதில் சில திருத்தங்கள் சொல்லும் ஜானகி பின்னர் அவருடன் இணைந்து அந்த பாடலை பாடி திரிஷாவை பாராட்டுவார்.
’சரி பாட்டு கேட்டாச்சி, உன் பேரு என்ன?’ என்பார்.

அதற்கு திரிஷா , ‘எஸ்.ஜானகி’ என்று கூறுவார்.
’அது என் பேரு, உன் பேரு என்ன?’ என்று ஜானகி மீண்டும் கேட்பார்.
’என் பேருதான் ஜானகி.. எஸ்.ஜானகி.. எஸ்.ஜானகி தேவி என்பார்.
அதைகேட்டு சிரிக்கும் ஜானகி, ’ஜானகி தேவியா, என் பேரையே நீ வச்சிகிட்டியா?’ என்று மகிழ்ச்சியில் பூரிப்பார்.
பிறகு வசனத்தை தொடரும் ஜானகி. ‘பாட்டு பாடுவதை நீ நிறுத்தவே கூடாது. கல்யாணம் ஆன பிறகும் தொடர்ந்து பாடணும். உன் கணவர்கிட்ட நான் சொல்றேன். நீ தொடர்ந்து பாடு’ என்று அந்த காட்சி செல்லும்..
ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மானை எஸ்.ஜானகி கண்ணீர் சிந்த வைத்த நிகழ்வை நாளை பார்க்கலாம்
எஸ்.ஜானகி 5ம் பகுதி நிறைவு
-கண்ணன்