சென்னை:

நிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான வழக்கில், நிலத்தை கையகப்படுத்துவதற்கு,  சுற்று சூழல் முன் அனுமதி தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

சேலத்தையும் சென்னையையும் இணைக்கும் 277.3 கி.மீ நீளமுள்ள எட்டு வழி பசுமை சாலை திட்டம் இரு நகரங்களுக்கிடையிலான பயண நேரத்தை பாதியாக இரண்டு மணி நேரம் 15 நிமிடங்கள் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கி,  நிலத்தை கையகப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியது.
இந்த 8 வழிச்சாலை திட்டம் காரணமாக,  சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சி புரம் ஆகிய 5 மாவட்டத்தில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி, நீர்நிலைகள், வீடுகள் , ரிசர்வ் காடுகள் என பல இடங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அதையும் மீறி, காவல்துறையினர் உதவியுடன்  சாலை அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதற்கு இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விசாயிகள், திட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தனர்.
அதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதி மன்றம் 8வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற திட்ட அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று அருண்மிஸ்ரா அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.
அப்போது நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் ஆஜராகி வாதிட்ட அரசு வழக்கறிஞர் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டுவழிச்சாலைத் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது, அத்தைகைய திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்னரே சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், அது வண்டியின் பின்னால் குதிரையை பூட்டுவதற்கு சமம் எனவும் தெரிவித்தார்.

அதைடுத்து,   மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சார்பில் இணை இயக்குனர் ஆஷிஷ் குமார் உச்சநீதி மன்றத்தில் பிரம்மானப் பத்திரம்  தாக்கல் செய்தார்.
அதில்,  2006-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கையின்படி, நிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் முன் அனுமதி தேவையில்லை. நிலம் கையகப்படுத்துவதற்கு நம்பத் தகுந்த ஆவணங்களே போதுமானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டே 8 வழி சாலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து 8 வழி சாலை திட்டத்தின் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.