ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தொடர் ஆகஸ்டு 14 முதல் தொடங்கும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதலமைச்சர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
கொறடா உத்தரவை மீறிய பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்கில், தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இதனிடையே சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் முயன்று வருகிறார். ஆகையால், சட்டசபையை கூட்ட வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை அடிக்கடி சந்தித்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், கெலாட்டின் பரிந்துரையை ஆளுநர் ஏற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகின.
அதே நேரத்தில் இன்று சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இந் நிலையில், சட்டசபை கூட்டத்தொடர் ஆகஸ்டு 14 முதல் தொடங்கும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் சட்டசபையின் 5வது அமர்வை ஆகஸ்டு 14 முதல் தொடங்கும். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று அவரது அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel