மும்பை
அயோத்தி ராமர் கோவிலில் காணொளி காட்சி மூலம் பூமி பூஜை செய்தால் கூட்டம் வருவதைத் தவிர்க்கலாம் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையொட்டி மத்திய அரசு ஸ்ரீ ராம ஜனம பூமி ஷேத்திர் டிரஸ்ட் என்னும் குழுவை அமைத்தது. வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று ராமர் கோவில் கட்டுமானம் பூமி பூஜையுடன் தொடங்க உள்ளது. இதில் பிரதமர் மோடி நேரில் கலந்துக் கொள்வார் என அமைப்பு அறிவித்துள்ளது. அனைத்து மாநில ,முதல்வர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பூமி பூஜையில் பக்தர்கள் கலந்துக் கொள்ள கொரோனா காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்டுமானத்தில் ஆரம்பத்தில் இருந்தே பாஜகவுடன் தீவிரமாக இணைந்து செயல்பட்ட கட்சி சிவசேனை ஆகும். இந்த கட்சி தற்போது பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சி செய்கிறது.
சிவசேனை கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே ஒரு பேட்டியில், “ராமர் கோவில் என்பது ஒரு சதாரண்மான கோவில் இல்லை. இதற்கு நாம் எவ்வளவோ கஷ்டப்பட்டுள்ளோம். தற்போது கொரோனாவை எதிர்த்து நாம் போரிடுவதால் மத கூட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும்.
நான் நினைத்தால் அயோத்திக்குச் சென்று பூஜையில் கலந்துக் கொள்ள முடியும். ஆனால் இந்த கோவில் அமையப் பாடுபட்ட லட்சக்கணக்கான ராம பக்தர்களால் அது முடியுமா? அவர்களைத் தடுக்க முடியுமா? இதனால் காணொளி காட்சி மூலம் பூமி பூஜையை நடத்தலாம். பூமி கழ்வு உள்ளிட்ட அனைத்தும் அவ்வாறு செய்ய முடியும்.
சென்ற முறை நான் அயோத்தி சென்றிருந்த சமயத்தில் கொரோனா பரவுதல் தொடங்கிய நேரம் ஆகும். என்னை அப்போது சரயு நதியில் ஆரத்தி எடுக்க அனுமதிக்கவில்லை. இதற்கு முன்பு நான் அந்த நதிக்கரையில் ஏராளமான கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். ராமர் கோவில் என்பது நம்பிக்கையில் அமைந்தது. மக்களை எப்படி அங்கு போகாமல் தடுக்கமுடியும்?” என கேட்டுள்ளார்.