மும்பை: 99 வயது நிரம்பிய மூதாட்டிக்கு, மும்பையின் எஸ்.ஆர். மேதா கிகாபாய் மருத்துவமனையில், இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லீலாவதி பரேக் என்ற பெயரைக் கொண்ட அந்த மூதாட்டிக்கு, வாழ்நாளிலேயே இதுதான் முதல் அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவருக்கு, சர்க்கரை வியாதியோ, இதயம் சம்பந்தமான நோயோ மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிரச்சினை அளிக்கக்கூடிய எந்த உடல்நல குறைபாடோ இல்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
கடந்த 1920ம் ஆண்டில் பிறந்த அவர், இத்தனை காலமும் மும்பை நகரிலேயே வாழ்ந்து வருகிறார். அவர் மிகவும் ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையை நடத்தி வருபவர் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஏப்ரல் 13ம் தேதி வீட்டில் தடுக்கி விழுந்ததில், இடுப்பில் காயமேற்பட்டதாலேயே, இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதானது என்று கூறப்படுகிறது.
அடுத்தாண்டில், அவரது 100வது பிறந்தநாளை, விமரிசையாக கொண்டாடுவதற்கு அவரின் குடும்பத்தார் திட்டமிட்டுள்ளனர்.
– மதுரை மாயாண்டி