நியூயார்க்: ஜூலை மாதத்தின் கடைசி 2 வாரங்களில் மட்டும், அமெரிக்காவில், மொத்தம் 97,000 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்நாட்டில், ஒட்டுமொத்த அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் இது 40% என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கன் அகடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிடல் அசோசியேஷன் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள மாநில அளவிலான தரவின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

“இந்தப் புள்ளிவிபரத்தின்படி, குழந்தைகளுக்கும் தொற்று ஏற்பட்டு, அவர்களாலும் வைரஸைப் பரப்ப முடியும் என்பது வெளிப்பட்டுள்ளது” என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவல் அமெரிக்காவில் துவங்கிய காலத்திலிருந்து, இதுவரையில் குறைந்தபட்சம் 340000 குழந்தைகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது, அந்நாட்டின் மொத்த நோயாளிகள் எண்ணிக்கையில் 9% என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிசோரி, ஓக்லஹோமா, ஜியார்ஜியா, ஃபுளோரிடா, மோன்டனா மற்றும் அலாஸ்கா ஆகிய மாநிலங்கள் இந்த பாதிப்பில் குறிப்பிடத்தக்கவை என்று கூறப்பட்டுள்ளது.