சென்னை: சென்னை மாநகராட்சியில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் பெயரில் சாலை உள்பட 97 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
கோடம்பாக்கம் மண்டலம், 134-வது வார்டு, ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவுக்கு ‘ரவிச்சந்திரன் அஷ்வின் சாலை’ என பெயரிட மாநகராட்சி அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் மார்ச் மாதத்திற்கான மாமன்ற கூட்டம் கடந்த 19ந்தேதி கூடியது. அன்றைய தினம் மாமன்றத்தில் 2025-26ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதாவது, ரூ.8,405 கோடியில் அளவிலான அறிவிப்புகளுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மழைநீர் வடிகால் பணிகளுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1032 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதியை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது
இந்த பட்ஜெட் மீதான விவாதம் ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூடத்தில் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் மார்ச் 21 நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொள்வதை பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள் தவிர்த்தது பேசும்பொருளாக மாறியது.
சென்னை மாநகராட்சிக்கு மொத்தம் உள்ள 196 கவுன்சிலர்கள் உள்ளனர் .இதில் 102 பேர் உள்ள பெண் கவுன்சிலர்கள். இதில் 4 பேர் ஏற்கனவே காலமாகிவிட்டனர். ஒரு பெண் கர்ப்பிணியாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் 60 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மொத்தம் 87 கவுன்சிலர்கள் மட்டுமே மாமன்றத்தில் கலந்துகொள்ளவந்திருந்தனர். மன்ற கவுன்சிலர்கள் அவையில் பங்கேற்பதை தவிர்த்தனர். இதனால் மாமன்ற கூடம் காலியாக காட்சியளித்தது.
இது பேசும்பொருளாக மாறியது. மாமன்றத்தில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்ற இருப்பதால், கவுன்சிலர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு அதிகாரிகள் மற்றும் கட்சி தலைமை மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பல கவுன்சிலர்கள் அடித்து பிடித்து ஓடி வந்தனர். இறுதியாக மொத்தம் 180 கவுன்சிலர்கள் வந்தனர்.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், சொத்து வரியை உயர்த்தியும் பற்றாக்குறை பட்ஜெட் போட்டிருப்பதாக விமர்சனம் செய்தார். அதற்கு பதில் அளித்த மேயர் ஆர்.பிரியா, “ஆண்டுதோறும் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தினால் நிதி வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் அதற்கான நிதி ரூ.350 கோடியை மத்தியஅரசு வழங்கவில்லை. அதை பெற்றுத்தர வேண்டும்” என்றார்.
இந்த கூட்டத்தொடரில், கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில், கடந்த ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வார்டு உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு தொகை ரூ.10 லட்சம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் வழங்கப்படும் என மேயர் அறிவித்தார்.
மாநகராட்சிக்கு சொந்தமான 65 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை டியுசிஎஸ் கூட்டுறவு சங்கம் மூலம் தொடங்க மாநகராட்சி அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர். அவரின் பெயரை சென்னை மாநகர சாலை ஒன்றுக்கு வைக்க மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. அதன்படி, கோடம்பாக்கம் மண்டலம், 134-வது வார்டு, ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவுக்கு ‘ரவிச்சந்திரன் அஷ்வின் சாலை’ என பெயரிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்ற பின்னர், மாநகராட்சி அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இறுதியில் மாமன்ற கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் மொத்தம் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.