டில்லி:

ஜார்கண்ட் மாநிலத்தில் பரீட்சாத்திர முறையில் செயல்படுத்தப்பட்ட நேரடி மானிய பரிமாற்றத்தால் 97 சதவீத குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சியாக இல்லை என்பது ஒரு சர்வே முடிவில் தெரியவந்துள்ளது.

பொருளாதார நிபுணர் ஜீன் டிரெஸ் இந்த சர்வேயை மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதில்,‘‘ஜார்கண்ட் மாநிலம் நாகிரி மாவட்டத்தில் 13 கிராமங்களில் உள்ள 224 வீடுகளில் இந்த சர்வே எடுக்கப்பட்டது.

இவர்கள் உணவு மானியத்தை ரொக்கமாக வங்கிகளில் இருந்து பெற்று பின்னர் ரேசன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ரூ.32க்கு கொள்முதல் செய்கின்றனர். கடந்த அக்டோபர் மாதத்திற்கு முன்பு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை நேரடியாக ரேசன் கடைகளில் வாங்கி வந்தனர்.

இவர்கள் தற்போது வங்கிகளுக்கு சுமார் 4 முதல் 5 கி.மீ. தூரம் வரை பயணம் செய்து அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி வாங்க சராசரியாக 12 மணி நேரம் வரை செலவிட வேண்டியுள்ளது. 28 சதவீதம் பேர் 15 மணி நேரம் வரை செலவிடுகின்றனர். இது 2 வேலை நாட்களுக்கு சமமாகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், ‘‘வரிசையில் காத்திருந்த பின்னர் அரிசி இல்லை என்று பலர் திரும்பிச் செல்லும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. அதோடு மானியத் தொகையும் மிக தாமதமாக தான் வங்கிகளில் வரவு வைக்கப்படுகிறது. எந்த வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது என்பதையும் சில குடியிருப்புவாசிகளால் அறிந்து கொள்ள முடியவில்லை. 95 சதவீத மக்களுக்கு எந்த வங்கி கணக்கை நேரடி மானிய பரிமாற்றத் திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை.

சராசரியாக ஒருவருக்கு 3 முதல் 4 வங்கிகளில் கணக்கு உள்ளது. ஒவ்வொரு வங்கிக்கும் சென்று விசாரித்த பின்னரே எந்த வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது என்று 70 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பணத்தை கையில் வாங்குவதில் பெரிய சிரமம் இருக்கிறது. அதேபோல் ரேசனில் அரிசி வாங்குவதிலும் சிரமம் உள்ளது என்று மக்கள் தெரிவித்தனர்.

அரிசி வாங்கவில்லை என்றால் ரேசன் கார்டு ரத்தாகிவிடும் என்று தகவலும் பரவி வருவது சர்வேயில் தெரியவந்துள்ளது. தற்போது வரை 77 சதவீதம் பேர் மட்டுமே மானியத் தொகை மூலம் அரிசி வாங் குகின்றனர். மீதமுள்ளவர்கள் சொந்த பணத்தில் அரிசி வாங்கி செல்கின்றனர்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.