கௌகாத்தி
வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்வதற்காக அசாம் மாநிலத்தில் இந்து அமைப்பான வி இ ப மற்றும் பஜ்ரங் தள் இல் இருந்து 90% பேர் விலகி உள்ளனர்.
இந்து அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவராக பிரவின் தொகாடியா இருந்தார். அதே நேரத்தில் தேசிய தலைவராக ராகவ் ரெட்டி இருந்தார். பிரவின் தொகாடியா மத்திய அரசின் பல செய்கைகளை விமர்சித்து வந்தார். இது பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு அதிருப்தியை உண்டாக்கியது. பல முறை பிரவின் தொகாடியாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் தேசிய தலைவர் தேர்தலில் பிரவின் தொகாடியாவின் ஆதரவாளரான ராகவ் ரெட்டியை எதிர்த்து ஆர் எஸ் எஸ் அனுதாபியும் முன்னாள் இமாசலப் பிரதேச ஆளுநருமான கோக்ஜி போட்டி இட்டார். கோக்ஜி மொத்தமுள்ள 192 வாக்குகளில் 131 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் வி இ ப மற்றும் அதன் இளைஞர் அணியான பஜ்ரங் தள் ஆகிய அமைப்பினர் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.
அதையொட்டி பிரவின் தொகாடியா வி இ ப வில் இருந்து ராஜினாமா செய்தார். மேலும் அவர் ஒரு புதிய இந்து அமைப்பை தொடங்க உள்ளார். ஏற்கனவே ஒரு கட்சியை தொடங்கி வரும் 2019 பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் வி இ ப மற்றும் பஜ்ரங் தள் தொண்டர்களில் பலர் பிரவீன் தொகாடியாவை பின்பற்றி ராஜினாமா செய்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள பஜ்ரங் தள் பிரமுகர்கள் 14000 பேரில் 13900 பேர் ராஜினாமா செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் கௌகாத்தி நகரில் உள்ள பஜ்ரங் தள் அமைப்பின் பிரமுகர்கள் 820 பேரில் 816 பேர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பில் இருந்து விலகிய பிரமுகர்கள் தங்களின் ஆதரவாளர்களுடன் இணைந்து வரும் 2019 பொதுத் தேர்தலில் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்ய உள்ளதாக கூறி உள்ளனர்.
இதே போல் விஸ்வ இந்து பரிஷத்தின் அசாம் மாநில தலைவர்களில் 400 பேரில் சுமார் 380 பேர் விலகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் வி இ ப அமைப்பின் மாநில ஆலோசகர் சர்மாவும் அடங்குவார்.