டில்லி
புதிய அமைச்சரவையில் 90 சதவீதம் பேர் கோடீசுவரர்களாகவும், 42 சதவீதம் பேர் கிரிமனல் வழக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது சில மூத்த அமைச்சர்கள் பதவிகள் பறிக்கப்பட்டது. தற்போதைய அமைச்சரவையில் பிரதமர் உட்பட 78 அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் மற்றும் இவர்கள் நிதி நிலை குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது.
தற்போது உள்ள அமைச்சர்கள் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் தொடர்பான ஒரு ஆய்வறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை அவர்கள், கடந்த தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரங்களில் இடம் பெற்றுள்ள தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கையின்படி மொத்தம் உள்ள 78 அமைச்சர்களில் 42 சதவீதம் பேர் (33) மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்த அமைச்சர்களில் 31 சதவீதம் பேர் (24) மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய மத்திய அமைச்சர்களில் சுமார் 90 சதவீதம் பேருக்கு (70) ரூ.1 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. இவர்களில், ஜோதிராதித்ய சிந்தியா ரூ.379 கோடி சொத்துடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்ததாக பியூஷ் கோயல் (ரூ.95 கோடி), நாராயண் ரானே (ரூ.87 கோடி), ராஜீவ் சந்திரசேகர் (ரூ.64 கோடி) உள்ளிட்டோருக்கு ரூ.50 கோடிக்கு மேல் சொத்து உள்ளது.
குறைந்த பட்சமாக திரிபுராவைச் சேர்ந்த பிரதிமா பூமிக் (ரூ.5 லட்சம்), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜான் பர்லா (ரூ.14 லட்சம்), ராஜஸ்தானின் கைலாஷ் சவுத்ரி (ரூ.24 லட்சம்), ஒடிசாவின் விஷ்வேஸ்வர் துடு (ரூ.27 லட்சம்) மற்றும் மகாராஷ்டிராவின் வி.முரளிதரன் (ரூ.27 லட்சம்) ஆகியோர் சொத்து வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.