டில்லி
ராஜஸ்தான் கோவிலில் இருந்து திருடப்பட்டு பிரிட்டனுக்கு கடத்தப்பட்ட 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் கற்சிலை மீட்கப்பட்டு மீண்டும் இந்தியா எடுத்து வரப்படுகிறது.
இந்தியாவின் ஏராளமான புராதன சிலைகள் கோவில்களில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளன. அவற்றை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மீட்டு இந்தியாவுக்கு எடுத்து வரும் பணிகளைச் செய்து வருகிறது. இவ்வாறு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் இருந்து பல புராதன இந்தியச் சிலைகள் மீண்டும் இந்தியத் தொல்பொருள் துறையினரால் எடுத்து வரப்பட்டுள்ளன.
இதில் இங்கிலாந்து நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் மிகச் சிறப்பான பணிகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து திருடப்பட்ட பிரும்மா – பிரும்மணி என்னும் அபூர்வ சிலை கடந்த 2017 மீட்கப்பட்டு டில்லி பழைய கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் வருடம் லண்டன் மாநகர காவல்துறை உதவியுடன் 12 ஆம் நூற்றாண்டின் புத்தர் வெண்கலச் சிலை மீட்கப்பட்டுள்ளது
இவ்வரிசையில் சமீபத்தில் ராஜஸ்தானில் இருந்து திருடப்பட்ட நடராஜர் கற்சிலை மீட்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கற்சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து திருடப்பட்டு இங்கிலாந்துக்குக் கடத்திச் செல்லப்பட்டுள்ளது. இந்த சிலையை இன்று லண்டன் காவல்துறையினர் இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சிலை விரைவில் இந்தியாவுக்கு எடுத்து வரப்பட உள்ளது.
இந்த நடராஜர் கற்சிலை நடனமாடும் நிலையில் ஜடாமகுடம், முக்கண் ஆகியவைகளுடன் உள்ளது. சுமார் 4 அடி உயரம் உள்ள இந்த சிலை சிவனுடைய அபூர்வமான நிலைகளில் ஒன்றாகும். இந்த சிலை ராஜஸ்தானில் உள்ள பரோலி என்னும் இடத்ஹ்டில் உள்ள காதேஸ்வரர் கோவிலில் இருந்து 1998 ஆம் வருடம் திருடப்பட்டதாகும். இந்த சிலை இங்கிலாந்துக்குத் திருடப்பட்டதைக் கடந்த 2003 ஆம் வருடம் கண்டுபிடித்து தற்போது இது மீட்கப்பட்டுள்ளது.