காத்மாண்டு: நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர்.
அந்நாட்டில் பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந் நிலையில் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர்.
நேபாளத்தின் வடமத்தியில் உள்ள சிந்து பால்சோக் நகரில் நாக்புஜே உள்ளிட்ட மூன்று கிராமப்பகுதிகளில் 11 வீடுகள் நிலச்சரிவில் முழுமையாக சேதமடைந்துள்ளன. காணாமல் போன 22 பேரை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது.
தகவல் அறிந்த நேபாள ராணுவம், ஆயுத காவல் படை மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 7 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். பலர் மீட்கப்பட்டு உள்ளனர்.
போடெகோஷி மற்றும் சுன்கோஷி ஆகிய நதிகளில் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட நபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.