டெல்லி: ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8வது ஊதியக்குழு அமைத்து மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
8-வது ஊதியக் குழுவின் விதிமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த .8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை ஊதியக்குழு அமைத்து, அதன் கருத்துக்களுக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு 7-வது ஊதியக் குழு தொடர்பான ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு முதல் புதிய ஊதிய உயர்வுகள் வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து 10 ஆண்டுகள் முடிவடைந்ததால், 8வது ஊதியக்குழு அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதை ஏற்பதாக மத்தியஅரசு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கூறியதுழ. ஆனால், ஊதியக்குழு ஆணையத்தின் தலைவர், பகுதி நேர உறுப்பினர், செயலாளர் நியமிப்பதில் கால தாமதம் ஆனது.
இந்த நிலையில், நீதிபதி (ஓய்வு) ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா இருப்பார். இந்த குழுவின் பகுதிநேர உறுப்பினராக பேராசிரியர் புலக் கோஷ், பேராசிரியர் (ஐஐஎம் பெங்களூரு) நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த குழுவின் உறுப்பினர்-செயலாளராக பங்கஜ் ஜெயின் செயலாளர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு நியமிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஊதியக் குழு அரசு ஊழியர்களின் கருத்து கேட்டு அதிகபட்சமாக 18 மாதங்களுக்குள் தங்களின் பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்குவார்கள். அந்த அடிப்படையில், வரும் 2026 ஜனவரி மாதத்திலிருந்து 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த முறைய ஊதியக் குழு அமைக்கவே காலதாமதம் ஆகி உள்ளதால், அதன் அறிக்கை கிடைக்க2028 வரை ஆகலாம் என கூறப்படுகிறது. அதனால், அறிக்கை தாக்கல் செய்து பிறகு, முன்தேதியிட்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு, அவர்களுக்கு அரியர் வழங்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுபோல, 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசில் பணியாற்றும் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள்.
மத்தியஅரசின் இந்த பரிந்துரைகளை மாநில அரசுகள் முழுமையாக ஏற்பது இல்லை. இருந்தாலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஊதிய உயர்வு வழங்குவதும் வழக்கமாக உள்ளது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் மத்திய அரசின் ஊதியக் குழு அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.