சேலம்: தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே 86% அணைகள் நிரம்பிய நிலையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

நடப்பாண்டு, தென்கிழக்கு பருவமழை காலத்திலும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், 86 சதவிகித அணைகள் முழு கொள்அளவை எட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மேட்டூர் அணையும் நடப்பாண்டில் 7வது முறையாக நிரம்பி உள்ளது.

தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.  இந்த காலகட்டம்,  தமிழ்நாட்டிற்கும், கரையோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளுக்கும் முக்கிய மழைக்காலமாகும், ஏனெனில் இது ஆண்டு மழையில் கணிசமான பங்களிப்பைக் கொண்டுள்ளது.  இதையொட்டி, தமிழ்நாட்டில், ஏரி, குளங்கள், கால்வாய்கள் தூர் வாரும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ள  நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலேயே மாநிலத்தின் பல்வேறு பகுதியில் நல்ல மழை பெய்த காரணத்தால், பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பின உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணை நடப்பாண்டில் 7வது முறையாக நிரம்பியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 86% நீர்நிலைகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளன. மேலும் பல நீர்நிலைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.

அணை 100% அளவுக்கும், பவானிசாகர் அணை 80.8% அளவுக்கும், அமராவதி அணை 96.1% அளவுக்கும், வைகை அணை 89.8% அளவுக்கும் தண்ணீர் நிரம்பியுள்ளன. பேச்சிப்பாறை அணை 75% அளவுக்கும், கிருஷ்ணகிரி அணை 87.5% அளவுக்கும், சாத்தனுர் அணை 82.4% அளவுக்கும், சோலையாறு அணை 97.7% அளவுக்கும், பரம்பிக்குளம் அணை 99.6% அளவுக்கும், ஆழியாறு அணையில் 98.6% அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.

தமிழ்நாட்டில்,  அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் வடகிழக்கு பருவமழையால் அணைகளுக்கு தண்ணீர்வரத்து மேலும் அதிகரிக்கும். இதனால் தமிழ்நாட்டில் அணைத்து நீர்நிலைகளும் விரைவில் 100% தண்ணீர் இருப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உபரி நீரை கையாள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.