: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த 3 மாதங்களில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த 3 மாதத்தில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.
சென்னை மாநகராட்சி பகுதியில் கொட்டப்படும் திடக்கழிவுகளால் நீா்வழிப் பாதைகள், நடைபாதைகள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. இதனால், மழைக் காலங்களில் தண்ணீா் செல்வது தடைபடுகிறது. இதுபோல உருவாகும் கட்டுமானம் மற்றும் இடிப்பாட்டுக் கழிவுகளை அகற்றும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்காக கட்டட மேலாண்மை வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கட்டடக் கழிவுகளை பிரித்து வழங்குவது, முறையாக அகற்றுவது, விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட வழிமுறைகளை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் கட்டடக் கழிவுகள் மண்டல அளவில் உள்ள மையங்களில் சேகரிக்கப்பட்டு பெருங்குடி மற்றும் கொடுங்கையூா் குப்பை கொட்டும் வளாகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. கட்டடக் கழிவுகள் தேங்குவதை குறைக்கும் வகையில் அவற்றை இரும்பு, மரம், நெகிழி மற்றும் கான்கிரீட் என தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஜன. 7 முதல் தற்போது வரை சுமாா் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ஒரு நாளைக்கு சுமாா் 1,000 டன் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்படுகிறது. கடந்த ஜன.1-ஆம் தேதி முதல் தற்போது வரை 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேகமாக 167 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இவற்றை மறுசுழற்சி செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சுமாா் 4,000 டன் கட்டடக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது’
என அவா் பதிவிட்டுள்ளாா்.