டெல்லி: கோவிட் 19 காலக்கட்டத்தில் பார்லே ஜி பிஸ்கெட்டுகள் அதிகம் விற்பனையாகி இருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது பல லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அனைத்து ஓட்டல்கள், உணவு விடுதிகள், கடைகள் அடைக்கப்பட்டன. ஏராளமானோர் வருவாய் இன்றியும், உணவின்றியும் தவித்தனர். இந்த கோவிட் 19 லாக்டவுனின் போது பார்லே ஜி பிஸ்கெட் அதிகம் விற்பனையாகி இருக்கின்றன.
1938 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் பார்லே ஜி இந்த லாக்டவுனின் போது அதிகபட்ச எண்ணிக்கையிலான பிஸ்கட்டுகளை விற்கும் தனித்துவமான மைல்கல்லை எட்டி இருக்கிறது. மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிகச் சிறந்த விற்பனை நடைபெற்றிருப்பதை அதன் நிர்வாகிகள் உறுதிப்படுத்தினர்.
நாங்கள் எங்கள் ஒட்டுமொத்த சந்தைப் பங்கை கிட்டத்தட்ட 5% ஆக உயர்த்தியுள்ளோம் . மேலும் 80–90% பார்லே ஜி தயாரிப்புகள் விற்பனையாகி இருக்கிறது. இதற்கு முன்பு இது பேன்று இல்லை என்று பார்லே தயாரிப்புகளின் பிரிவுத் தலைவர் மயங்க் ஷா கூறினார்.
நுகர்வோர் கிடைக்கக்கூடியதை தங்கள் வசதிக்கு ஏற்ப வாங்கிக் கொண்டனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். கடந்த 18-24 மாதங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், விநியோக வரம்பை அதிகரித்தோம். அதன் காரணமாக, விற்பனை அதிகரித்தது என்றும் கூறினார்.
லாக்டவுன் காலத்தில், பார்லே ஜி பலருக்கு ஆறுதல் உணவாக மாறியது. மேலும் பலருக்கு அவர்கள் வைத்திருந்த ஒரே உணவு அது. இது ஒரு சாதாரண மனிதனின் பிஸ்கட், ரொட்டி வாங்க முடியாத மக்கள் பார்லே ஜி வாங்கினர் என்றும் கூறினார்.
பார்லே பிஸ்கட் தயாரிப்பாளர்கள் மார்ச் 24ம் தேதி லாக் டவுனுக்கு பின்னர் மிகக் குறுகிய காலத்திற்குள் தங்கள் ஆலையின் உற்பத்தி செயல்பாடுகளை இயக்கினர். இந்த நிறுவனங்களில் சில தங்கள் தொழிலாளர்களுக்கு சுலபமான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்காக போக்குவரத்து ஏற்பாடு செய்தன.
மற்ற பிஸ்கட்டுகளான பிரிட்டானியாவின் தயாரிப்புகள், பார்லே கிராக்ஜாக், மொனாக்கோ மற்றும் ஹைய்டு அண்ட் சீக் ஆகியவை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
பார்லே தயாரிப்புகள் நாடு முழுவதும் 130 தொழிற்சாலைகளில் தங்கள் பிஸ்கட்டுகளை உருவாக்குகின்றன. அவற்றில் 120 ஒப்பந்த அலகுகள், 10 சொந்தமான வளாகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.