டெல்லி:

லைநகர் டெல்லியில் தேசிய கட்சிகளை விரட்டியடித்துவிட்டு, 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது மாநிலக்கட்சியான ஆம்ஆத்மி. அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்த தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட 9 பேரில் 8 பெண்கள் அமோகமாக வெற்றி பெற்றுள்ளனர்.

70 தொகுதிகளைக்கொண்ட சட்டமன்ற தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது.  79 பெண்கள் உட்பட 672 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஆளும் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளிலும் தனித்து  போட்டியிட்டது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 8ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், நேற்று (11ந்தேதி) வாக்கு எண்ணிக்கை வெளியானது.

இதில் 62 இடங்களை ஆம்ஆத்மி கட்சி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.  இந்த தேர்தலில் 9 பெண் வேட்பாளர்கள்  ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட நிலையில் ,அவர்களில்  8 வேட்பாளர்கள்  அபாரமாக வெற்றி பெற்றுள்ளனர்.

அதிஷி, ராக்கி பிர்லா, பாவ்னா கவுர், பார்மிளா தோக்காஸ், தன்வந்தி சந்டேலா, பந்தன குமாரி, ப்ரீத்தி தோமர், ராஜ் குமாரி தில்லியன் உள்பட 9 பேரை களமிறக்கியது.

இவர்களில் கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி 11,393 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸின் ஷிவானி சோப்ராவையும், பாஜகவின் தாரம்பீர் சிங்கையும் தோற்கடித்தார்.

ஆர் கே புரம் சட்டசபை தொகுதியில் பிரமீளா தோக்காஸ் பாஜகவின் அனில் குமார் சர்மாவை 10 ஆயிரம வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மங்கல்பூரி சட்டசபை தொகுதியில் ராக்கி பிர்லா 30,116 வாக்கு வித்தியாசத்திலும் பாஜகவின் கரம் சிங் கர்மாவையும்,

பாலம் சட்டசபை தொகுதியில் பாவ்னா கவுர் 32, 765 வாக்குகள் வித்தியாசத்திலும்  பாஜகவின் விஜய் பண்டிட்டை  தோற்கடித்தனர்.

ரஜௌரி கார்டன் தொகுதியில் தன்வந்தி சந்டேலா 22,972 வாக்குகள் அதிகம் பெற்று பாஜகவின் ரமேஷ் கன்னாவை தோற்கடித்தார்.

ஷாலிமர் பாக் தொகுதியில் ஆம் ஆத்மியின் பந்தனா குமாரி 3000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ரேகா குப்தாவை தோற்கடித்தார்.

திரிநகரில் ப்ரீத்தி தோமர் பாஜகவின் திலக் ராம் குப்தாவை விட 10,710 வாக்குகள் அதிகம் பெற்றார்.

ஹரிநகரில் ராஜ் குமாரி தில்லியன் பாஜக வேட்பாளர் தஜீந்தர் பால் சிங்கை விட20 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார்.