பசவனபாகவாடி, கர்நாடகா
கர்நாடகா மாநிலத்தில் ஒரு பாலத்தின் கீழ் 8 வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் அதற்கான காகிதங்களும் வீசப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ளது பசவனபாகவாடி தொகுதி. இந்த தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மேம்பாலம் உள்ளது. கூலி வேலைக்கு செல்லும் சில தொழிலாளர்கள் அந்த பாலத்தின் கீழ் சென்றுள்ளனர். அப்போது அங்கு 8 வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் அதற்கான காகிதங்களும் வீசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இந்த கிராம மக்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு இந்த விவரத்தை தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் அந்த இயந்திரங்களை கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர். இவை எந்த தொகுதிக்கான இயந்திரங்கள் என்பது இன்னும் சரிவர தெரியவில்லை.
இந்த இயந்திரங்கள் தேர்தல் சமயத்தில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு பிறகு இங்கு வீசப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். இந்தப் பகுதியில் இவ்வாறு வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் வீசி எறியப்பட்டது மிகவும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.