லெபனான் முழுவதும் நடைபெற்ற பேஜர் வெடிப்புகளில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 2,750 பேர் காயமடைந்தனர் மேலும் 200 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் பல்வேறு பிரிவினர் பயன்படுத்தி வந்த ஆயிரக்கணக்கான பேஜர்களை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்ததை அடுத்து இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று மாலை 3:45 மணிக்கு முதல் பேஜர் வெடித்ததாகவும் இந்த சீரியல் பேஜர் வெடிப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்ததாகவும் தெரிகிறது.

இந்த வெடி விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் இந்த வெடி விபத்தில் பெய்ரூட்டில் உள்ள ஈரான் தூதர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

பேஜர்களை வெடிக்கச் செய்தது இஸ்ரேல் நாட்டின் சதி வேலை என்று குற்றம்சாட்டியுள்ள லெபனான் இஸ்ரேலுக்கு அதற்கான தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை என்ற போதும் ஆயிரக்கணக்கான பேஜர்களை வெடிக்கச் செய்தது மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் என்று கூறப்படுகிறது.

கடந்த அக்டோபரில் காசா போர் வெடித்ததில் இருந்து இஸ்ரேலும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பும் எல்லை தாண்டிய போரில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது நடைபெற்றுள்ள இந்த சீரியல் பேஜர் வெடி விபத்து உலக நாடுகளின் கவனத்தை இஸ்ரேல் மற்றும் ஈரான் பக்கம் திசை திருப்பியுள்ளது.