டெல்லி: நாடு முழுவதும் உள்ள மத்தியஅரசு அலுவலகங்களில் 8.72 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது என நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் நேற்று கேள்வி நேரத்தின்போது அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் தொடர்பாக உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், ரயில்வே அமைச்சர் பதில் அளித்தனர். அப்போது,
‘1.3.2020 நிலவரப்படி மத்திய அரசின் 77 துறைகளில் 40 லட்சத்து 4 ஆயிரத்து 941 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதில் 31 லட்சத்து 33 ஆயிரத்து 658 பேர் பணியாற்றுகிறார்கள்.
8 லட்சத்து 71 ஆயிரத்து 283 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் புள்ளி விவரங்கள் செலவினத் துறையில் இருந்து பெறப்பட்டவை’ என தெரிவித்தார்.
ரெயில்வே துறையில் மட்டும் 2.98 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் 1.40 லட்சம் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் மக்களவையில் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் பதில் கூறினார். அதில், நாடு முழுவதும் பல்வேறு ஐ.ஐ.டி.களில் 4,300க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்தார். இதில் அதிகபட்சமாக கரக்பூர் ஐ.ஐ.டி.யில் 815 காலியிடங்களும் மும்பையில் 532 இடங்களும் தன்பாத்தில் 447 இடங்களும் சென்னையில் 396 இடங்களும் கான்பூரில் 351 இடங்களும் ரூர்க்கியில் 296 இடங்களும் காலியாக உள்ளதாகக் கூறினார்.
காலி பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.