வாஷிங்டன்:
வீட்டின் அருகே விளையாடிய 8 வயது சிறுமியை 11 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டென்னிஸி மாநிலத்தை சேர்ந்த மெக்காயலா டையர் என்ற 8 வயது சிறுமி வீட்டின் அருகே சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 11 வயது சிறுவன் ஒருவன், அந்த சிறுமிகள் வைத்திருந்த நாய் குட்டியை தன்னிடம் கொண்டு வருமாறு கேட்டான். இதற்கு அந்த சிறுமிகள் மறுத்துள்ளனர்.
உடனடியாக தனது வீட்டின் உள்ளே சென்ற அந்த சிறுவன் சிறிது நேரத்தில் ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து வந்தான். இது உண்மையான துப்பாக்கி இல்லை என்று கூறி மெக்காயலா சிரித்துள்ளார். உடனடியாக அந்த சிறுவன் துப்பாக்கியை லோடு செய்து, சிறுமியின் இதயத்துக்கு கீழே சுட்டுள்ளான். இதில் மயங்கி விழுந்த அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து ஓடிவந்த அந்த சிறுமியின் தாய் குழந்தையை பார்த்து கதறி அழுதுள்ளார்.
போலீசார் அந்த சிறுவனை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிறுவனுக்கு 19 வயது அடையும் வரை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நீதிபதி டென்னிஸ் உத்தரவிட்டார். மேலும், அந்த சிறுவன் துப்பாக்கி இயக்க பயிற்சி பெற்றுள்ளான். தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் அவன் வேட்டைக்கு சென்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.