டில்லி:

நாட்டில் மருத்துவத்துறையை மேம்படுத்தும் நோக்கிலும், அனைவருக்கும் மருத்துவ உதவி கிடைக்கும் வகையிலும் மேலும் 75 புதிய கல்லூரிகள் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது.

 நாடு முழுவதும்  புதிதாக 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 75 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படும் என்றும், இதன் காரணமாக  மேலும் 15,700 எம்.பி.பி.எஸ்  இடங்கள் உருவாக்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது என்றவர், .உள்நாட்டு தேவைக்கு போக உபரியாக உள்ள 60 லட்சம் டன் சர்க்கரையை நடப்பு ஆண்டில் ஏற்றுமதி அனுமதி அளிக்கவும், இதற்கான மானியத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தவும் அமைச்சரவை ஒப்புதல்  வழங்கப்பட்டு உள்ளது.

சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பேரிடர் மேலாண்மை கட்டமைப்பை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.  இந்த அமைப்பை அடுத்த மாதம் 23-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து,  செய்தியாளர்களிடம் பேசிய மத்தியஅமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது,

நிலக்கரி சுரங்கம் மற்றும் அதுசார்ந்த உள்கட்டமைப்பு பணிகளில் 100 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

மின்னணு ஊடகத்துறையில் 26 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.