சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் 75 இந்தியர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேறியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) டமாஸ்கஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர் சிரியாவில் பாதுகாப்பற்ற நிலைமை அதிகரித்துள்ளது.

இதையடுத்து அங்குள்ள இந்தியர்களை வெளியேற்ற வெளியுறவு அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது.

இதில் சைதா ஜைனாபில் சிக்கித் தவித்த ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த 44 தொழிலாளர்கள் உட்பட 75 பேர் லெபனானுக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகங்கள் ஒருங்கிணைந்து இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த 75 பேரும் லெபனானில் இருந்து விரைவில் வணிக விமானங்கள் மூலம் இந்தியா திரும்புவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பஷர் அல்-அசாத்தின் சுமார் 14 ஆண்டுகால ஆட்சி மற்றும் அசாத் குடும்பத்தின் 54 ஆண்டு கால ஆதிக்கம் முடிவுக்கு வந்த நிலையில் அசாத் நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிரியாவில் உள்நாட்டு குழப்பம் அதிகரித்துள்ளதோடு கிளர்ச்சிப் படையினருக்கும் அசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.

சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வெளிநாட்டில் உள்ள இந்திய பிரஜைகளின் பாதுகாப்பிற்கு இந்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் இருக்கும் இந்தியர்கள், டமாஸ்கஸில் உள்ள தூதரகத்துடன் தொடர்ந்து இணைந்திருக்குமாறு MEA வலியுறுத்தியது. அவர்கள் அவசர உதவி எண் (+963 993385973) அல்லது மின்னஞ்சல் (hoc.damascus@mea.gov.in) வழியாக தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.