டெல்லி: நாடு முழுவதும் 7,261 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2024ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 97.96% ரூபாய் 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுளதாகவும், மீதம் 7,261 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் இருப்பதாகவும், கைவசம் உள்ள நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளது.
மோடி தலைமையிலான மத்தியஅரசு கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திடீரென அறிவித்தது. இதனால் பொதுமக்கள் சொலோனா துயரத்துக்கு ஆளாகினர். இது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, புதிதாக ரூ.500, டூரூ.2000 நோட்டுக்கள் என பல புது நோட்டுக்கள் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மக்களிடையே ரூ.2000 நோட்டுக்கள் அதிக அளவில் காணப்பட்டது. ஆனால், கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகளை, புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி திடீரென அறிவித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், ரிசர்வ் வங்கி, 2,000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்படவில்லை என்றும், அவை செல்லுபடியாகும் என்று தெரிவித்ததுடன், மக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை 2023 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது. பின்னர் இதற்கான அவகாலம் மேலும் பலமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இறுதியாக செப்டம்பர் 2024வரை கெடு விதித்துள்ளது.
முன்னதாக, 2023 மே 19 அன்று ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது. இது 2024 ஆகஸ்ட் 30 அன்று ரூ.7,261 கோடியாக குறைந்துள்ளது என்று RBI தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் 7 வரை நாட்டில் உள்ள அனைத்து வங்கி கிளைகளிலும் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/மாற்றுவதற்கும் வசதி இருந்தது.
2023 மே 19 முதல் ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களில் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான வசதி இருந்து வருகிறது. 2023 அக்டோபர் 9 முதல், RBI கிளை அலுவலகங்கள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்வதற்காக ரூ.2000 நோட்டுகளை ஏற்றுக்கொண்டு வருகின்றன.
மேலும், பொதுமக்கள் இந்தியா போஸ்ட் மூலம் நாட்டிற்குள் உள்ள எந்தவொரு தபால் நிலையத்தில் இருந்தும் ரூ.2000 நோட்டுகளை தங்கள் வங்கி கணக்குகளுக்கு கடன் வழங்குவதற்காக RBI-யின் எந்தவொரு கிளை அலுவலகத்திற்கும் அனுப்பி வருகின்றனர்.
நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/மாற்றுவதற்கும் நாட்டில் உள்ள 19 RBI அலுவலகங்கள் அகமதாபாத், பெங்களூரு, பெலப்பூர், போபால், பூபனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாட்டி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா மற்றும் திருவனந்தபுரத்தில் இதற்கான வசதிகள் உள்ளன.
இந்த நிலையில், 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 97.96% ரூபாய் 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுளதாகவும், மீதம் 7,261 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் இருப்பதாகவும், கைவசம் உள்ள நோட்டுகளை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் கையிலிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றப்பட முடியாமல் போனால் என்னவாகும், என்பதற்கு இதுவரை ரிசர்வ் வங்கி தெளிவான தகவலைத் தரவில்லை.
முன்னதாக ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கைக்குக் காரணமாக ரிசர்வ் வங்கி, தனது ‘Clean Note Policy’ என்னும் கொள்கையைச் சுட்டிக்காட்டியிருந்தது. இந்தக் கொள்கையின்படி, ரிசர்வ் வங்கி, தரமான ரூபாய்த் தாள்கள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதை உறுதி செய்கிறது.
இந்த முடிவு குறித்து, கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், ‘கிட்டத்தட்ட 89% அளவான 2,000 ரூபாய் நோட்டுகள் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் வழங்கப்பட்டவை,’ என்றும் ‘அவற்றின் ஆயுட்காலம் 4 முதல் 5 வருடங்கள்தான்,’ என்றும் கூறியிருந்தது. மேலும், “2018ஆம் ஆண்டு மார்ச் மாதம், மொத்தம் 6.73 லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3.62 லட்சம் கோடியாகக் குறைந்தன,” என்றும் ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. பொதுவாக 2,000 ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப் படுவதில்லை என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருந்தது.