டெல்லி: தலைநகரில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்று 71வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில்,டெல்லிக்குள் விவசாயிகள் புக முடியாதவாறு, பல சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளது காவல்துறை. நாட்டின் எல்லையில், எதிரி நாட்டு ரணுவத்தினர் உள்ளே புக முடியாதவாறு, தடுப்புகளை ஏற்படுத்தி இருப்பதுபோன்ற, போர் சூழலை நினைவு கூறும் வகையில் டெல்லி காவல்துறையினர், சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.
விவசாயிகளுக்கு எதிராக, டெல்லியின் சாலைகளில், இரும்பிலான தடுப்புகள், சாலையில் ஆணிகள், கான்கீரிட் தடுப்புகள், முள்வேலி, கற்பாறைகள் மற்றும் தற்காலிக சுவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு நாட்டின் “போர் போன்ற” சூழலை ஏற்படுத்தி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மோடி அரசின் இநத் நடவடிக்கை டுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த இரு மாதங்களை கடந்தும் போராடி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்தியஅரசு 11 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இதற்கிடையில், ஜனவரி 26ந்தேதி, விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியதுடன், டெல்லி செங்கோட்டைக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில், காவல்துறையினரின் வாகனங்கள், பேருந்துகள் தாக்கப்பட்டன. மேலும், சுமார் 400 போலீஸார் காயமடைந்தனர்.இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து விவசாயிகள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்து உள்ளனர். இதையடுத்து, போராடும் விவசாயிகள், டெல்லிக்குள் புகமுடியாதவாறு , சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
டெல்லி-உத்தரபிரதேசம் எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து முன்னேறுவதை தடுக்கும் விதமாக காசிபூர் பகுதி சாலையில் இரும்பு முட்களை சாலையில் பதித்துள்ளனர்.
டெல்லி சிங்கு எல்லையில், விவசாயிகள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதற்காக, இரும்பு கம்பிகளை பயன்படுத்தி, தற்காலிக சுவர்களை, போலீசார் அமைத்துள்ளனர். மேலும், உடைக்க முடியாத வகையில், சிமென்ட் பயன்படுத்தியும், இந்த தற்காலிக சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை காலை முதல், காஸிபூர், சிங்கு மற்றும் டிக்ரி ஆகிய டெல்லியின் மூன்று எல்லைகளையும் அடைத்து, காவல் துறை தடுப்புகளை வைத்துள்ளது. இதனால், இந்த மூன்று வழிகளிலும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இது தவிர, இந்த மூன்று இடங்களிலிருந்தும் டெல்லி செல்லும் பாதையிலும் ஏராளமான தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று இடங்களில் தான் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது.
டிக்ரி எல்லையில் காவல்துறை, கான்கிரீட் தடுப்புகளை நிறுவியுள்ளனர். மேலும், வாகனங்கள் கடக்க முடியாதபடி கூர்மையான இரும்புக் கம்பிகளும் சாலையில் புதைக்கப்பட்டுள்ளன ரேஸர் கம்பி, ஹெவி மெட்டல் தடுப்பு, கல் கற்பாறைகளின் அடுக்குகள் மற்றும் கான்கிரீட் தடுப்புகளின் வரிசைகள் ஆகியவை காசிப்பூர் மற்றும் சிங்குவில் உள்ள பிரதான சாலைகளை வரிசைப்படுத்துகின்றன. முள்வேலி சுருள்கள் மற்றும் கான்கிரீட் அடுக்குகள் இங்குள்ள சாலைகளைத் தடுக்கின்றன. திக்ரியைப் போலவே, காசிப்பூர் எல்லையிலும் நகங்கள் நிறுவப்பட்டன.
டெல்லியில் இருந்து சிங்கு எல்லையை நோக்கிச் செல்லும் பாதையில், சிங்கு எல்லையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. எல்லைக்கு அருகிலுள்ள சாலை முழுவதுமாகத் தோண்டப்பட்டுள்ளது.
சிங்கு எல்லையில் தடுப்பு தில்லி பக்கத்தில் 2 கி.மீ. சாலை தோண்டப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வாகனங்கள் தடைக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படு கின்றன, ஆனால் ஊடக வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வழித்தடங்களும் தடுக்கப்பட்டுள்ளன. சிங்கு எல்லைக்குச் செல்லும் அனைத்து வழித்தடங்களும் மூடப்பட்டுள்ளன. நரேலாவிலிருந்து போராட்டத்தில் பங்கேற்க வந்துள்ள 46 விவசாயிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
காஸிபூர் எல்லையில் விவசாயிகளின் போராட்டம் நடக்கும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில வாகனங்கள் மட்டுமே தடுப்புக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் ஊடக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
டெல்லி-அரியானா எல்லையில், போலீஸ் அதிகாரிகள் பெரிய கான்கிரீட் பலகைகளைக் கொண்ட சாலைகளைத் தடுத்து, திக்ரி எதிர்ப்புத் தளம் வரை செல்லும் சாலையின் அகலத்திற்கு குறுக்கே பெரிய இரும்பு நகங்களை பதித்துள்ளனர்.
பல அடுக்கு பாதுகாப்பை டெல்லி காவல் துறையினா் மேற்கொண்டுள்ளனா். அவர்களுடன் துணை ராணுவப் படை, விரைவு நடவடிக்கை படை, மத்திய ரிசா்வ் காவல்படை ஆகியோா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில்,
“தடுப்புகள் எங்களை ஒன்றும் தடுக்காது”, போராட்டத்தை முடக்கும் மத்திய அரசின் முயற்சி, வெற்றி பெறாது. தடுப்புச் சுவர் அமைத்தாலும், விவசாயிகள் குவிவதை தடுக்க முடியாது’ , என்று கூறியுள்ளனர்.
“நாங்கள் அமைதியாக எங்கள் கோரிக்கைகளை முன்வைக்க அமர்ந்திருக்கிறோம். இது தொடரும். ஆனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி வளைக்க நாங்கள் முன்னேறிச் செல்ல விரும்பினால், இந்த தடுப்புகள் எங்களைத் தடுக்காது. எங்கள் விஷயத்தில் அரசாங்கம் சதி செய்கிறது.” என்கின்றவர் விவசாய அமைப்புகளின் தலைவர்க.
நாடாளுமன்றத்தை முற்றுகையிட பிப்ரவரி 6 ஆம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், விவசாயிகள், தலைநகருக்குள் செல்லும் நெடுஞ்சாலைகளைத் தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லை பகுதிகளில் நிலைமை மோசமடைந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், டெல்லி மற்றும் அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசம் பகுதிகளில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளின் நடமாட்டம் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கூறிய டெல்லி, போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா, விவசாயிகள் நகருக்குள் புகுவதை தடுக்கவே தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக கூறியதுடன், ஜனவரி 26அன்று, விவசாயிகளின் “டிராக்டர்கள் பேரணியின்போது, ஏராளமான போலீசார் தாக்கப்பட்டனர், காவல்துறையினரின் தடுப்புகள் உடைக்கப்பட்டன,அதுகுறித்து ஏன் எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை, இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” , தற்போதும், நாங்கள் தடுப்புகளை மீண்டும் உடைக்கமுடியாதவாறு பலப்படுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி காவல்துறையினரின் தடுப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள, கிசான் (உழவர்) சமூக இராணுவத்தின் உறுப்பினர் அனூப் சனாட், சர்வதேச எல்லை போல அவர்கள் தடுப்புகளை நிறுவுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சிங்கு தளத்தில் கலந்து கொண்ட விவசாயி தலைவர் சுர்ஜித் சிங் டேர் கூறும்போது “அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ எல்லையில் டிரம்ப் அறிவித்தபடி டெல்லி மற்றும் ஹரியானாவின் எல்லையில் மோடி அரசு ஒரு சுவரைக் கட்டி வருகிறது” “அரசாங்கம் அனைத்து மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மின் விநியோகம் குறைத்தல், தண்ணீரை மூடுவது மற்றும் இணையத்தை மூடுவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என எச்சரித்தார்.
மத்தியஅரசின் இந்த நடவடிக்கை, விவசாயிகளின் மன உறுதியைக் குறைக்கும் முயற்சியாகும் என்று கூறியதுடன், “விவசாயிகள் இன்னும் உற்சாகமாக உள்ளனர், சட்டங்கள் ரத்து செய்யப்படும்போதுதான் நாங்கள் திரும்பி வருவோம்.” என்றார். மூன்று சட்டங்களையும் ரத்து செய்து, குறைந்த பட்ச ஆதரவு விலைக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கினால் மட்டுமே இது முடிவுக்கு வரும்
கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவின் தலைவர் சத்நாம் சிங் பன்னு, “இணையச் சேவைக்கும் போக்குவரத்துக்கும் தடை விதிப்பதன் மூலம், விவசாயிகள் போராட்டம் பற்றிய செய்திகள் வெளிவருவதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது”, மோடி அரசாங்கம் தனது பிரசாரக் கருவிகளின் மூலம் போராட்டம் பலவீனமடைந்துள்ளதாகக் காட்ட முயற்சிக்கிறது, ஆனால் அது உண்மையல்ல. அரியானா மற்றும் பஞ்சாபிலிருந்து விவசாயிகள் தொடர்ந்து வருகிறார்கள்.” என்றும் கூறுகிறார்.
சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தலைவர் சத்நாம் சிங் அஜ்னாரா, “அரசாங்கம் அனைத்து மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதில் மின்சாரத் தொடர்பைத் துண்டித்தல், தண்ணீர் விநியோகத்தை நிறுத்துதல், இணையச் சேவையை முடக்குதல் ஆகியவை அடங்கும்.
இப்போது அரசாங்கம் போராட்டக்களம் உள்ள பாதையில் போக்குவரத்தைத் தடை செய்கிறது. இந்த அரசாங்கம் இதையெல்லாம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் “அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால், முதலில் அதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்திலிருந்து டெல்லி செல்லும் அனைத்துச் சாலைகளும் பல அடுக்குத் தடுப்புகளால் மூடப்பட்டுள்ளன. நடைபாதைகள் கூட மூடப்பட்டுள்ளன.
காஸிபூர் எல்லையில் விவசாயிகள் மீண்டும் அணி திரண்டதால், அங்கு கூட்டம் அதிகரித்து வருகிறது. அங்குள்ள விவசாயிகள், இந்தக் கூட்டம் மேலும் அதிகமாகக்கூடாது என்றும் கூடாரங்கள் அமைக்கப்படக்கூடாது என்பதற்காகவே காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகக் கூறுகிறார்கள்..
இந்த பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் டெல்லியில் பணிபுரிபவர்கள். இவர்கள் பெரும்பாலும் வசுந்தரா, வைஷாலி, இந்திராபுரம், கௌஷாம்பி ஆகிய இடங்களில் வசிக்கின்றனர். சாலைகள் மூடப்பட்டதால், மக்கள் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
டெல்லியில் இருந்து உத்தர பிரதேசம் செல்லும் ஒரே ஒரு பாதை மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அது, ஆனந்த் விஹார் வழியாக காசியாபாத்துக்கு வரும் வழி. ஆனால் இங்கேயும், சாலையின் ஒரு பக்கம் மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படுவதால், வாகனங்கள் பல கிலோமீட்டருக்கு வரிசையில் நிற்கின்றன.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக டெல்லி மக்கள் கடந்த 2 மாதங்களாக பெரும் அவதிக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் மக்கள் பாதிக்கப்படவில்லை, என்றாலும், வெளி மாநிலங்களில் தலைநகரை நோக்கி வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் தலைநகரில் இருந்து அலுவலம் சம்பந்தமாக வெளிமாநிலங்களுக்கு சென்று வருவதில் கடுமையாக சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும், ஜனவரி 26 க்குப் பிறகு, போக்குவரத்து முடக்கம், சாலை தடுப்பு போன்ற நடவடிக்கைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று வருத்தம் தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே மாட்டிறைச்சி விவகாரம், சிஏஏக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, தற்போது புதிய விவசாய சட்டங்கள் தொடர்பாக போராட்டம் போன்றவை பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய சவால்களை முன்வைத்துள்ளது.