நேபாளத்தில் மூன்றாவது நாளாக இன்றும் வன்முறை நீடித்து வருகிறது.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி அதிகாரம் ராணுவத்திடம் ஒப்படைப்படும் என்று கூறப்படுகிறது.

உலகளவில் கடந்த ஒரு வாரத்தில் ஜப்பான், பிரான்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நேபாளத்திற்குச் சுற்றுலா சென்ற சுமார் 700 இந்திய சுற்றுலா பயணிகள் அங்கு சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது.

வன்முறையாளர்கள் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு தீ வைத்ததை அடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும், காத்மாண்டு விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதால் அங்கு சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகளை மீட்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

முக்கிய அரசியல் புள்ளிகள் விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாகக் கருதி போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதால் அங்கிருந்து பயணிகளை மீட்பது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.